உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யன் திருவள்ளுவரில்
ஓர் இராக மாலிகை

“அய்யன் திருவள்ளுவர்” எனும் இந்தப் பாமாலை பல்வேறு ராக மலர்களால் கவித்துவம் என்னும் நூலில் கோக்கப்பட்டிருக்கிறது. சுதி சுத்தமாக இருக்கிறது. தாளம் கணக்குத் தப்பவில்லை. இராகங்களுக்குரிய ஆரோக்ணம் - அவரோகணம்,ஸ்வரம் பிசகாமல் அமைத்து அடிநாதமாக விளங்குகிறது.

இந்த அய்யன் திருவள்ளுவர் என்ற பாமாலையில் - தமிழின் மோகனம், தமிழின் ஹம்சநாதம், தமிழின் கல்யாண வசந்தம், தமிழின் சாரமதி, தமிழின் சக்ரவாகம்... என்றெல்லாம் இனங்குறித்துச் சொல்லும்படி, பல்வேறு ராகங்களை - அவற்றின் ஆலாபனைகளை - செவிநுகர் கனிகளாக ஏற்றுச் சுவைத்து மகிழ்ந்தது போன்ற சுகானுபவம், பக்கத்திற்குப் பக்கம் நாம் வாசிக்கும் போது ஏற்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த திருவள்ளுவர் மாலையை இயற்றியிருக்கும் வித்தக விரல்கள், ஒர் உயரிய தமிழ் வித்துவானுக்குரியவையாக இருப்பதுதான். - -

என் மதிப்பிற்குரிய நண்பர் புலவர் திரு. கலைமணி அவர்கள், 'சொல்லாடல் என்னும் கலையில் வல்லவர் என்பதை, அவரது முந்தைய நூல்களைப் படித்து இன்புற்று உய்த்து உணர்ந்தவன் நான.

அவருக்கென்று ஒர் அற்புத தமிழ்நடை வசப்பட்டு - தகத்தகாயமாக ஒளிபரப்பி, வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெளிச்ச விழுதாகத் தொங்கி, வாசிப்பவரின் அறியாமை இருட்டை அறவே அகற்றுகிறது.

நான், நண்பர் கலைமணியின் நூல்களை எப்பவுமே மிகவும் ஆசையோடு படிப்பவன்.

ஓர் உரைநடை ஆசிரியர், கவிஞராக இருப்பது வியப்பில்லை. இருப்பினும் - அப்படி இருப்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல.

5