பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


வேதனைப் படுவதைக் கண்டு தீராத துன்பம் அவருக்கு எழுந்தது.

வானத்தைப் பார்த்து வழி என்ன என்று மார்ட்டின் லூதர் கிங் கேட்டார்!

ஞானத்தைப் பார்த்து நியாம் எது என்று தனக்குத்தானே வினா தொடுத்தார்.

ஒழுக்கம் தவழும் திக்கை நோக்கி ஓடியோடி - இதற்கென்ன நீதி என்று கேட்டார்.

முடிவு, திருந்தாத மனித குலத்தைத் திருத்தும் பொருட்டு - அறப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

உலக உத்தமர் காந்தியடிகளின் அறப்போர் தத்துவத்தை - அகிம்சைக் கருத்தைத் தனது பொது வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார். அதனால் அவர் அமெரிக்க காந்தி என்ற புகழைப் பெற்றார்!

அவருடைய அருளற அகிம்சைப் போராட்ட முறையால் விஞ்ஞான முரட்டுத்தனத்தில் இருப்பவரையும் மெய்ஞ்ஞான வழிக்குக் கொண்டு வர முடியும் என்று நம்பினார்.

சுழலும் மனமும் - சுழலும் துப்பாக்கியும் கொண்ட ஓர் அமெரிக்கன், அமைதியிலே பூக்கும் ஆனந்த மலராக என்றைய தினம் மலருவான் என்று - அவர் மனக்கோட்டை கட்டினார்.

மார்டின் லூதர் கிங் பேச ஆரம்பித்தால், சொலல்வல்லன் - சோர்விலன் என்பதை மெய்ப்பிப்பார்.

அவரது வாய் சிதறிய முத்துக்களைப் பொறுக்கி எடுக்க - ஆன்மிகச் சீர்திருத்த அறிவுடைய எவரும் வெட்கப்பட மாட்டார்கள்!

அன்பிலே வேரோடி, அருளிலே கிளையிட்ட அவரது பேச்சுக்கள் - துன்பிலே இருந்த நீக்ரேர்க்களைத் தென்பிலே கொண்டு திணித்தன.

அமெரிக்கக் கூன் முதுகுகள் அத்தனையும், அவரது சொற்பொழிவை, செயற்றிறனைக் கண்டு நிமிர்ந்தன.

வெள்ளைக்காரனும் - கருப்பனும், தனது தாய்க் கருவிலே இருக்கும் போது, மாதம் பத்துதான்.

82