நோக்கம்
பிரான்சு!-விசித்திரமான நாடு ! விபரீதமான நிலைமைகள்!
பிரான்சு! அழகும் அவலட்சணமும், வீரமும் கோழைத்தனமும் சமரசமும் சதிச் செயலும், கலையும் கொலையும், காவியமும் கபடமும், செல்வமும் சீரழிவும், உலுத்தரின் உல்லாசமும் உழைப்போரின் பெருமூச்சும் -- ஒன்றை ஒன்று அடுத்தடுத்து இருந்து வந்த நாடு.
பிரான்சு! ஒரு மன்னனைப் பெற்றிருந்தது - அவனோ! பறவைகளை வேட்டையாடும் பொழுதுபோக்கிலும், பாவையர்களைப் பொன் வண்டுகளாகக் கருதிக் களிப்புத் தேடுவதிலும் மூழ்கிக் கிடந்தான்.
பிரான்சு நாட்டுக்கு அரசியானாள் ஆன் என்னும் அழகி! ஆட்சியிலேயும் இடம் கிடைக்கவில்லை, அழகுதனை விருந்தாகக் கொள்ள மன்னனும் முன்வரவில்லை!
பிரான்சு நாட்டைத் தமது கொலுமண்டபமாகக் கொண்டு கோலாகல வாழ்வு நடாத்தினர், பிரபுக்கள்.
பிரான்சு நாட்டில் அருளாலயங்கள் நிரம்ப ! அங்கு ஆண்டிகள் அரசோச்சினர்.
பிரான்சு நாட்டின் சுதந்திரம் பறிபோகக் கூடாது! பண்பு கெடக்கூடாது 1 மதிப்பு மங்கிடலாகாது! இந்த நோக்கத்துக்காக, மக்கள் உழைக்க, ஓடாகிப்போக!
அரசாண்ட ஆண்டி தோன்றிட என்னென்ன தேவையோ அவை யாவும் இருந்தன, அன்றைய பிரான்சில்.
அரசாண்ட ஆண்டி ஒரு வரலாற்று நிகழ்ச்சி -- கருத்தளிப்பது.