69
முறையில் போப்பாண்டவருக்கு அடக்கம். ஆனால், முதலமைச்சர் என்ற நிலையில் போப்பாண்டவர் குறுக்கிட்டாலும், அரசுக்காக, பிரான்சுக்காக, கடமையைச் செய்தாக வேண்டும், என்று பதிலளித்தார் ரிஷ்லு.
கத்தோலிக்கர்களைக் கசப்படையச்செய்ததால், பிராடெஸ்ட்டென்டுகளிடம் கண்ணியமாக நடந்து கொண்டார் போலும் என்று எண்ணிடத் தோன்றும். அப்படி ஒன்றுமில்லை. அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.
ஹ்யூஜீநாட் என்றழைக்கப்படும், பிராடெஸ்ட்டென்ட் மக்கள், பிரான்சில் ஒரு பகுதியில், மிக்க செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். அரசுக்குள் அரசுபோல், அவர்கள் தனிக் கோட்டைகள், தனிப் படைகள், தனி நகரஆட்சிகள் அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். ஒப்புக்கு, பிரான்சு மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர்.
இந்த நிலைமையை ரிஷ்லு எதிர்த்தார், பிராடெஸ்ட்டென்டுகளின் கோட்டை ஊரான லாரோகேல் என்னும் இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கி, சின்னபின்னமாக்கினார். அந்தப் போரின் போது கார்டினல் ரிஷ்லு இரத்த வெறிகொண்டலையும் ராணுவத் தலைவனாகக் காட்சி தந்தது கண்டு இவரா, அறநூற்களைப் படித்தவர், ஐயன் அடியாராக இருந்தவர், என்று எவரும் கேட்டிருப்பர்.
லாரோகேல் கோட்டை முற்றுகையின் போது, ஆங்கில அரசு பிராடெஸ்ட்டென்டுகளுக்குத் துணை புரிவதாக வாக்களித்தது--ஓரளவு உதவிபுரிந்தது--உதவிக்கு வந்த கப்பற்படையை ரிஷ்லு முறியடித்து, லாரோகேல் கோட்டையை வளைத்துக் கொண்டான். சொல்லொணாக் கஷ்டப்பட்டனர் பிராடெஸ்ட்டென்டுகள். பட்டினி ரிஷ்லுவின் படையைவிடக் கொடுமை விளைவித்தது. புல் பூண்டுகளும் கிடைக்கவில்லை, செருப்புத் தோலைக்கூட வேகவைத்துத்தின்றார்களாம்--அந்த வீரமக்கள் எலும்புந்தோலுமாயினர்--நோய் சூறையாடிற்று--முதியவர்கள் மாண்டனர், குழந்தைகள் இறந்தன, கொடுமையின் அளவு சொல்லுந்தரத்ததன்று. பணிவதன்றி வேறு