உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83


உடன் வருக! என்று கடிதம் வருகிறது. செல்லவில்லை!! நாலு நாட்களாகக் காத்துக் கிடக்கிறோம், தாங்கள் வந்து தான் சவ அடக்கம் நடைபெற வேண்டும். இதற்கும் செல்லவில்லை. அவசரமான அலுவல்-இப்படி அப்படி அசைய முடியாது--தாய் இறந்தார்களா, தாங்கொணாத் துக்கம்தான், ஆனால் என் செய்வது, காரியம் இருக்கிறதே, முடிந்ததும் கடுகிச் செல்லலாம்--என்றுதான் எண்ணினான் ரிஷ்லு.

எப்படி மனம் இடங்கொடுத்தது என்றுதான் எவரும் கேட்பர். ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டது.

ஆட்சிக் குழுவிலே ரிஷ்லுவுக்குச் செயலாளர் பதவி தரப்பட்டது. அப்போதுதான் தாயார் இறந்த செய்திவந்தது. இருபத்தோரு நாள் கழித்தே ஊர் சென்று, சவ அடக்கம் செய்தான் ரிஷ்லு.

ஊர் என்ன எண்ணும், என்ன சொல்லும் என்பது பற்றிப் பயப்படுவதில்லை.

ஊருக்கு, தன்னைப்பற்றித் தெரிவித்துக்கொள்ளும் விளம்பரப் பிரசாரத்தையும் திறம்பட நடத்திவந்தான்.

பேரவைக் கூட்டத்திலே முதன்முதல் பேசியதும், பலரும் பாராட்டினர்--ரிஷ்லு அவ்வளவுடன் திருப்தி அடையவில்லை, அந்தச் சொற்பொழிவை அச்சிட்டு, ஏராளமாக வழங்கிட ஏற்பாடு செய்தான். எதையும் அரைகுறையாக விட்டுவைப்பது, ரிஷ்லுவின் முறையல்ல. பிரன்ச்கெஜட் எனும் பிரசார இதழைத் துவக்கி, திறமையான ஆசிரியர் மூலம் நடத்தச்செய்து, அதன்மூலம், ரிஷ்லு, தன்னைப் பற்றியும் தன் ஆட்சி முறையைப்பற்றியும் பிரசாரம் செய்துவந்தான்.

காற்று இல்லை, வெளிச்சம் இல்லை, மலர் இல்லை, மகிழ்ச்சி இல்லை, வெள்ளிச் சாமான் இல்லை, பட்டு விரிப்பு இல்லை என்று ஆயாசப்படும் நிலையில், லூகான் நகர தேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு "அரசுக்காக! பிரான்சுக்காக" பணியாற்றிப் பெற்ற நிலை எப்படி இருந்தது! மன்னனுக்கு, தன் உயிலின்படி 1,50,000 பவுன் வைத்திருந்தான்! இதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/83&oldid=1549066" இலிருந்து மீள்விக்கப்பட்டது