பக்கம்:அரசியர் மூவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 ☐ அரசியர் மூவர்



முரண் அழகு

மந்தரையை நமக்கு அறிமுகம் செய்துவைக்கு முன் ஏறத்தாழ நாற்பது பாடல்கள் மூலம் ஒரு நிலைக்களத்தை அமைக்கிறான் கவிஞன். அயோத்தி மக்கள் இராமன்.முடி சூடப் போகிறான் என்பதைக் கேட்டு எல்லை மீறி மகிழ்கின்றார்கள். அவர்கள் மகிழ்ச்சி மிகுதியால் வழியில் கண்டவர் அனைவருக்கும் பொருளை வாரி வழங்குகின்றார்கள்; நாட்டை அலங்கரித்தார்கள்; வீட்டை அலங்கரித்தார்கள்; தம் வீடுகளில் ஏதோ விழா நடப்பது போலவே ஒவ்வொருவரும் நினைத்தனர். அயோத்தியைப் பார்த்தால்,

'பொன்னகர் இயல்பெனப் பொலியும்.'
(1445)

நகர மக்களோ எனில்,

“ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர் ; தடித்தனர் ; சிலிர்த்து மெய்ம்மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்."

(1433)

எல்லை மீறிய இந்த மகிழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு 'இது ஏதோ ஒரு பேராபத்தின் அறிகுறி' என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. எல்லை மீறிய மகிழ்ச்சியில் திளைக்கும் பொழுது இன்றுங்கூட நம் மனத்தில் இத்தகைய எண்ணம் தோன்றுதல் இயல்பு. பல சமயங்களில் இவ்வச்சம் மெய்ம்மையாக நடைபெற்றும்விடுகிறது. அதே நிலைமையை உண்டாக்கவே கவிஞன், நகர மக்களின் இவ்வாரவாரத்துடன் கூடிய மகிழ்ச்சியை அறிவித்துவிட்டு, உடனே கூனியைக் கொண்டுவந்து நிறுத்துகிறான். அவளை எவ்வளவு அழகாகக் கவிஞன் அறிமுகஞ்செய்கிறான் என்று நினைக்கிறீர்கள்!

“இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள்.” (1445)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/10&oldid=1495438" இலிருந்து மீள்விக்கப்பட்டது