பக்கம்:அரசியர் மூவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 அரசியர் மூவர்


உண்டு என்று கூறுவர். அந்த ஆற்றல் காரணமாகக் கோசலை உண்மையில் ஆணை இட்டவள் கைகேயியே என்பதை ஒரு நொடியில் அறிந்து கொண்டாள் என்றும் கூறலாம். கம்பனுடைய கோசலைக்கு இத்தகைய பண்பாட்டைத்தான் கூற முடியும். ஆனால், வான்மீகளின் கோசலை தசரதனுடன் சேர்ந்து முடியை இராமனுக்குப் பெறச் சூழ்ச்சி செய்கிறாளாகலின், அவள் உண்மை கண்டது வியப்பன்று. ஆனால், கம்பநாடன் கோசலை சூழ்ச்சி செய்ததாகக் கூற இடமே இன்று. எனவே, அவள் அறிவுத் திறத்தாலும், இராமனுடைய சொற்களில் மன்னவன் பெயர் வாராமையாலும், இந்த முடிவுக்கு வந்தாள் என்று கூறுவது பொருத்தமே. தசரதன் நேரே கூறி இருப்பின், இராமன் அதைக் குறிப்பிடாதிருக்க நியாயம் இல்லை. ஆனால், அரசனையல்லாமலும் அவன் பெயரில் ஆணை இட வேண்டுமாயின், அரசன் உரிமை மனைவியாகிய கைகேயி தவிர, யாரால் முடியும்? எனவே, இந்த முறையிலும் அவள் முடிவு செய்தாள் என்றும் கூறலாம். தன் கணவன் வாயால் இவ்வாறு கூறத் துணிய மாட்டான் என்பதைக் கோசலை நன்கு அறிவாள். இக்கருத்து முறையானது என்பதைக் கம்பராமாயணத்தை ஒரு முறை கற்றாரும் நன்கு அறிய முடியும். தசரதன் வாயால் இராமனுக்கு முடி இல்லை என்றோ அவன் வனம் புக வேண்டுமென்றோ ஒரு முறைகூடக் கூறவில்லை. எனவே, அவனைப் பற்றிக் கோசலை கொண்ட கருத்தும் பொருத்தம் உடையதே ஆகும். அரசன் கருத்தை ஏற்றோ ஏற்காமலோ கைகேயி தான் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்றும், அதனாற்றான் இராமனும் இது மன்னன் ஆணை என்று கூறவில்லை என்றும் அவ்வறிவுடைப் பெருமகள் கண்டுகொண்டாள். எனவே, மகனுக்கு அறவுரை கூறுமுகமாக, 'இது அரசன் ஆணை அன்று என்று ஒதுக்கிவிடாமற் கீழ்ப்படிதல் முறை.” என்று கூறினாள். இதனால் விளைந்த தொல்லையை உணர்ந்த இராமன், அடுத்த பாடலில் விரிவாகக் கூறுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/102&oldid=1496205" இலிருந்து மீள்விக்கப்பட்டது