பக்கம்:அரசியர் மூவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல்தேவி கோசலை ☐ 101



கோசலைக்கு உற்ற பேரிடி


“தாய்உரைத்தசொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தைஅத் தோமில் குணத்தினான்,
‘நாய கன்எனை நல்நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டுஓர் பணி,' என்று இயம்பினான்.

"ஈண்டு உரைத்த பணி என்னை?' என்றவட்கு,
'யாண்டுஓர் ஏழினொடு ஏழ்அகன் கானிடை
மாண்ட மாதவ ரோடுஉடன் வைகிப்பின்
மீண்டு நீவரல் வேண்டும்என் றான்,' என்றான்." (1611,1612)

இப்பாடல்கள் ஆய்ந்து கொள்ளற்கு உரியன. முதற்பாடலில் கோசலையின் எண்ணத் தவறுதலை எடுத்துக்காட்டுவான்போன்று, "நாயகன் ஏயது ஒரு பணி உண்டு.” என்று கூறிவிடுகிறான். இந்த அளவில் கோசலைக்குத் தன் கணவன்தான் ஏவினான் என்ற எண்ணம் தோற்றுகிறது. இனி இதனை அடுத்து மற்றோர் பணி யாதாக இருக்கும் என்று அவள் கேட்பது அசட்டையோடு கூடி உள்ளது. அவளைப் பொறுத்த வரை இராமனுக்கு முடி இல்லை என்று கூறுவதைக்காட்டிலும் கொடிய செயல் வேறு ஒன்றும் இருத்தற்கில்லை போலும்! எந்தக் கணவன் இவ்வாறு கூறத் துணியமாட்டான் என்று அவள் முழு உறுதியோடு நம்பினாளோ, அந்தக் கணவனே கூறினான் என்று இராமனே கூறிவிட்டமையின், தசரதன் அவளுடைய மதிப்பில் மிகுதியும் இறங்கிவிட்டான். ஆதலாற்றான், “நாயகன் ஏயது ஒர்பணி உண்டு," என்று இராமன் கூறவும் கோசலை சாவதானமாக, "ஈண்டு உரைத்த பணி என்னை?” என்று கேட்கிறாள். அணையப்போகிற விளக்கு மிக்க ஒளியுடன் எரிவது போலப் பெருந்துன்பத்தில் ஆழப்போகிற கோசலைக்கு இப்பொழுது ஒரு வினாடி அமைதி கிட்டுகிறது. இராமனுக்கு முடி இல்லை என்ற செய்தியால் தாக்குண்ட அவளுக்கு இன்னும் அச்செய்தியின் முழு ஆற்றலும் நன்கு விளங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/103&oldid=1496796" இலிருந்து மீள்விக்கப்பட்டது