பக்கம்:அரசியர் மூவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 105



இராமன் கூறக் காரணம் யாது? இப்பாடலின் நான்காம் அடியில் அதற்கு விடை கூறுகிறான் கவிஞன். இராமனைப் பொறுத்த வரை தசரதன் தந்தையாவான்; கோசலையைப் பொறுத்த வரை கணவனாவான். எனவே, இவ்விருவரும் அவனிடம் மன்றாடித்தாம் வேண்டியவற்றைப் பெறுதல் முறை. ஆனால், இவை அனைத்தினும் மேலாக அவன் மன்னன் என்ற முறையில் உண்மை ஒன்றுக்கே கட்டுப்படவேண்டுமே தவிர, மனைவி மகன் போன்ற உரிமை இங்குப் பாராட்டப்பட நியாயமில்லை. தசரதன், மகன்மேற்கொண்ட காதலால் தவறு இழைத்தாலும், உலகம் மன்னன் தவறு இழைத்ததாகவே தூற்றும். தன் தந்தை மகன் மேற்கொண்ட காதலால் குலத்துக்கே பழி தேட எந்த மைந்தன் தான் விரும்புவான்? ஒரு வேளை தாய் தன்னுடைய பெண்மையாலும், மகன்மேற்கொண்ட காதலாலும் அதனை மறந்துவிடப் போகிறாளோ என்று அஞ்சிய மைந்தன், அக்கடமையை அவட்கு நினைவூட்டுவான் போல, 'நம் வேந்தனை' என்று குறிப்பிடுகிறான். அன்றியும், இராமன் அவளைத் 'தாயே' என்று விளிக்காமல், 'அருங்கற்பினோய்' என்று விளிப்பதிலும் ஒரு கருத்து அடங்கியுள்ளது. 'கணவனுக்குத் துணையாய் நின்று கடமையை நிறைவேற்றுவதா? மகன் மாட்டுக்கொண்ட காதலால் கணவனுக்கு விரோதமானவற்றைச் செய்வதா?' என்ற தரும சங்கடமான நிலையில் நிற்கிறாள் கோசலை. இந்த நிலையில் அவளது கடமை முதலில் கணவனுக்குப் பிறகே மகனுக்கும் என்பதை நினைவூட்டுகிறான் கடமையைப் போற்றத்தோன்றிய வள்ளலாகிய இராமன். 'கற்பைக் காப்பது கணவன் பக்கம் நிற்றலே என்பதை 'அருங்கற்பினோய், என்ற விளியால் அவளுக்கு அறிவுறுத்தி விட்டான். இவ்வாறு கோசலையின் கடமையை நினைவூட்டிய பிறகு மிக அமைதியாகவும் அழகாகவும் சொல்ல வேண்டியவற்றை அவள் மனத்திற்பதியும்படிக் கூறினானாம். அவ்வாறு அவன் யாது கூறினான்? “சிறந்த தம்பி திருவுற, எந்தையை மறந்தும்பொய்யிலன் ஆக்கிப் பின் மீள்வன்,” என்பதே அவன் கூறிய வாசகம். மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/107&oldid=1496907" இலிருந்து மீள்விக்கப்பட்டது