பக்கம்:அரசியர் மூவர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ☐ அரசியர் மூவர்


 வாய் இழப்பதைக் காட்டிலும், சொல்லாமலே தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்கிறாள் அப்பெண்ணரசி. இராமன் பிரிவால் தசரதனைக் காட்டிலும் வருந்தப் போகிறவள் கோசலைதான் எனி னும், பெண் குலத்துக்கே உரிய முறையில் தன் பிள்ளைப் பாசத்தையும் அன்பையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இப்பொழுது கடமையை மேற்கொள்கிறாள் கோசலை, தன்னைக் காத்துக்கொள்ளுதலின் அடுத்த படியிலே நிற்கின்ற கடமை தன் கொண்டானைப் பேணுதல் அன்றோ?

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
(குறள்.56)


இதோ தசரதனுக்கு அறிவுரை கூறத் தொடங்கி விட்டாள் கோசலை.

கோசலையின் அறிவுரை

“அரசரே, தள்ளத் தகாத பெருமையுடை வாய்மையை ஏற்றுக் கொண்டு அதன் வழி நிற்கும் பொழுது மகன்மேல் அன்பு கொண்டு இருத்தல் உம் பெருமைக்கு இழிவு தருமானால், அதனை உலகம் ஏற்றுக்கொள்ளுமா?” என்ற கருத்து அமைய,

"'தள்ள நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா
வகைநின்று
எள்ளா நிலைகூர் பெருமைக்கு இழிவாம் என்றால்
உரவோய்
விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல் மெலியின்
உலகம்
கொள்ளாது அன்றோ?' என்றாள் கணவன் குறையக்
குறைவாள்." (1657)


என்று வரும் பாடல் ஆய்ந்து நோக்கற்கு உரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/114&oldid=1496940" இலிருந்து மீள்விக்கப்பட்டது