பக்கம்:அரசியர் மூவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 115


 மகிழ்ச்சி அதன் பயனாய் இருக்கும். கடமையை நிறைவேற்றும் இயல்பு அனைவர்க்கும் அமைந்து விடுவதொன்று அன்று. அவ்வாறு நிறைவேற்ற வேண்டிய இன்றியமையாமை ஏற்படும் பொழுது 'தரும சங்கடம்' என்ற நிலை வந்துவிடுமாயின், அது இன்னும் வருந்தத் தக்கதேயாகும். தருமசங்கடம் என்பது, இரண்டும் கடமை போலத் தோன்றுகிற நிலைதான். இரண்டில் யாதானும் ஒன்றை நிறைவேற்றப் புகுந்தால், மற்றொன்றுக்குத் தீமையாய், முடியும். இதுவே தருமசங்கடம் எனப்படும். இத்தருமசங்கட நிலையில் எதனை மேற்கொள்வது, எதனை விடுவது என்ற தொல்லை ஏற்பட்டுவிடும்; எந்த முடிவுக்கும் வரமுடியாமல் திண்டாட நேரிடும். கோசலையின் நிலையும் இத்தகையதே. இதனை நினைத்துத்தான் ஆசிரியன், “ஆவா. உயர்கோ சலையாம் அன்னம்என் உற்றனள்” என்று வருந்திக் கூறுகிறான். இத்தகைய தரும சங்கடம் ஏற்பட்டாலும், தன் தாயன்பை உள்ளே இருத்திக்கொண்டு கணவனுக்குரிய கடமையில் அவள் நின்றது போற்றற்குரிய பண்பாகும். அதிலும் அக்கணவன் தன் மாற்றாளாய கைகேயியின்பால் கழிபெருங்காதல் பூண்டு அவ்வன்பின் மிகுதியால் இந்த இடரை அடைந்தான் என்று அறிந்த நிலையிலும் அவள் தன் கடமையைச் செய்தாள் என்றால், தலையாய கற்புடையவள் என்று அவளைக் கூறுதல் முற்றிலும் பொருத்தம் உடையதே.

இறுதி முயற்சி

இதனை அடுத்த நிலையில் வசிட்டன் சொல்லைக் கேட்ட மன்னவன், இராமன் ஒரு வேளை வருவான் என்று நினைத்திருந்த எண்ணம் பொய்யாகிவிட, மீட்டும் மயக்கம் அடைந்துவிட்டான். அவன் மயக்கத்தைக் கண்ட கோசலை, "இறந்தான்கொல்லோ அரசன்" என்னா இடர் உற்று அழிவாள், மீட்டும் மன்னவனைத் தேற்ற வேண்டும் என்ற உறுதி பூண்டவளாய்த் தன் மனம் நம்பாத ஒன்றைப் பேசுகிறாள். இராமன் உறுதியாக வரமாட்டான் என்பதை நன்கு அறிந்திருந்தும், "முனிவன் உடன் நம் ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே!” (1874) என்று கூறுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/117&oldid=1496801" இலிருந்து மீள்விக்கப்பட்டது