பக்கம்:அரசியர் மூவர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 117


 தன் மனத்தில், எவ்வாறாயினும் மன்னவன் துயரை மாற்றி அவனது செல்லும் உயிரையும் நிறுத்திவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்த கோசலைக்கு அரசனுடைய இச்சொற்கள் இடிபோல அமைந்தன. அவனைத் தேற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இவண் வந்த அவள் உடனே மூர்ச்சையாகிவிட்டாள்.

பரதனுக்கு இழைத்த பிழை

இதனை அடுத்து நாம் கோசலையைக் காண்பது பரதன் மீண்ட பிறகேயாகும். கேகய நாட்டிலிருந்து மீண்டபரதன், தன்னைப் பெற்ற தாய் செய்த பெரும் பிழையை அறிந்து, அவளை வெறுத்து ஏசிவிட்டுக் கோசலையினிடம் சென்று ஆறுதல் பெறலாம் என்ற கருத்துடன் வந்து அவள் காலடியில் வீழ்ந்து அரற்றுகிறான். அவன் அரற்றும் அந்த நேரம் வரையில் கோசலை பரதனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல், அவன்மேல் ஓர் ஐயம் கொண்டே இருக்கிறாள். தன் மாற்றாளாய கைகேயி செய்த சூழ்ச்சிக்கு அவள் மகனாகிய பரதனும் உடந்தையாய் இருந்தான் என்றே அவள் முடிவு செய்துவிட்டாள். பிறந்தநாள் தொட்டுப் பரதனை அவளே வளர்த்திருந்தாலும், பரதன் இத்தகைய காரியம் செய்வானா என்று ஏனோ அவள் நினைந்து பார்க்கவில்லை. எல்லையற்ற துன்பங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக வந்த மோதினவுடன் அம்மங்கை நல்லாள் நடுவு நிலையுடன் ஒன்றை ஆராயும் இயல்பை இழந்து விட்டாள் போலும்! அன்றேல், பரதனைப் பற்றிய இத்தவறான எண்ணத்தை அவள் கொள்ளக் காரணம் இல்லை. பரதனே முடிசூடப்போகிறான்,' என்று முதல் முதலாக இராமனே அவளிடம் தெரிவித்த பொழுதுகூட அவள் வருந்தவில்லை; வருந்தாதது மட்டும் அன்றி, “நிறை குணத்தவன் நின்னினும் நல்லவனால்” (1609) என்று அல்லவா கூறுகிறாள்! அவ்வாறு பரதனை இராமனைவிட'நல்லவன் என்று கூறிய கோசலை ஏன் இவ்வாறு அப்பரதன்மேல் ஐயங்கொள்ள வேண்டும்? அவளுடைய நிலையில் யார் இருந்தாலும் இவ்வாறுதான் ஐயங்கொண்டிருப்பர். ஆட்சியைத் தன் மகனுக்கு ஆக்கிக்கொள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/119&oldid=1496807" இலிருந்து மீள்விக்கப்பட்டது