பக்கம்:அரசியர் மூவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 ☐ அரசியர் மூவர்




"நாற்கடல் படுமணி நளினம் பூத்ததுஓர்
பாற்கடல் படுதிரைப் பவன வல்லியே
போற்கடைக் கண் அளி பொழியப் பொங்கணை
மேற்கிடந் தாள்.” (1448}

என்று அவளை மட்டும் இவ்வாறு உயர்ந்த நிலையிற் கூறக் காரணம் யாது? இவ்விருவரும் இழைத்தது தீமையேயாயினும், இருவர்க்கும் இடையில் கடலனைய வேற்றுமையைக் காண்கிறான் கவிஞன். கைகேயியின் மனம் முதலில் மாறாமல் இருந்து, இறுதியில் மாற்றம் அடைந்தது உண்மைதான். அதற்காகவும் அவளை ஓரளவு போற்று கிறான் கவிஞன். இயற்கையாகவே அவள் மனம் தூய்மையானது என்பதையும், கூனிமிகவும் முயன்று கெடுத்த பின்னரே அவள் மனந் திரிந்தது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டக் கவிஞன் பெரிதும் முயல்கிறான். “ஆழ்ந்த பேரன்பினாள்” (1454) என்றும், “தெய்வக் கற்பினாள்” (1450) என்றும், “வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெஞ் சொல்”(1469) கைகேயியை ஒன்றுஞ் செய்யவில்லை என்றும் கவிஞன் கூறிப் பரதன் தாயினுடைய பண்பட்ட தன்மையை நன்கு எடுத்துக் காட்டுகிறான்.

ஒப்பு நோக்குக

அவ்வாறு முதலில் தூய உள்ளத்தளாய் இருந்த கேகயன் மகள், இறுதியில் மனம் மாறினாலும், அதற்குத் தக்க காரணங்கள் உண்டு. ஆகலின், அவளை முற்றிலும் கெட்டவள் என்று கூறுவதற்கில்லை. மைந்தன்மேற் கொண்ட பாசத்தாலும் அறியாமையாலுமே அவள் தவற்றைச் செய்கிறாள். மேலும், தான் செய்யும் தவறு இத்துணைப் பெரிய இராமாயணத்திற்கு இடமாகிவிடும் என அவள் கனவிலும் கருதியவள் அல்லள்.எனவே, அவளை நல்லவளாகவே ஆசிரியன் அறிமுகஞ் செய்துவிடுகிறான். ஆனால், கூனியைப் பொறுத்த வரை, அவள் தான் செய்யும் கொடுமையை நினைந்து பார்த்து அதனால் விளையப்போகும் தீமையையும் ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/12&oldid=1495420" இலிருந்து மீள்விக்கப்பட்டது