பக்கம்:அரசியர் மூவர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 125


 என்ற குறளுக்கு எதிர்மறை இலக்கியமாகிவிட்டனர் தாயும் மைந்தனும். காப்பியத்தில் இவ்வளவு சிறிய இடத்தைப் பெறினும், சுமித்திரை கற்பார் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுவிடுகிறாள். காப்பியத்தில் மட்டும் என்ன தசரதன் மனத்திலுங்கூட இவள் மிகச் சிறிய இடத்தையே பெற்றுள்ளாள் என்று நினைக்க வேண்டியுளது.

முதனூலாசிரியராகிய வான்மீகியார் சுமித்திரையைத் தரசத னுடைய இரண்டாம் மனைவியாகவும் கைகேயியை மூன்றாம் மனவிையாகவும் கூறுகிறார். ஆனால், கம்ப நாடன் கைகேயியை இரண்டாம் மனைவியாக்கிச் சுமித்திரையையே மூன்றாம் மனைவியாக்குகிறான். அதனால் சுமித்திரையை'இளைய மென்கொடி’(284) என்று குறிக்கிறான். இந்த முறை மாற்றம், மேலாகக் கவனிக்கும் பொழுது பெரிதாகப்படாமற் போயினும், ஆழமான உட்கருத்துடன் செய்யப்பட்டிருத்தலை ஆய்பவர் காண்டல் கூடும். கைகேயியை இளையாளாகக் கூறிய வான்மீகியார் இலக்குவன் கூற்றாகவும், தம் கூற்றாகவும் தசரதனைப் பன்முறையும் 'காம பரவசன்' என்று கூறிப் போகிறார். இவ்வாறு கூறாவிட்டாலுங்கூடக் கைகேயியை இளையாள் என்று கூறிய உடன் தசரதன் செயல்கட்குப் புதுப்பொருள் காணும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. கைகேயிக்குத் தசரதன் வரம் தந்த நிகழ்ச்சி இப்பொழுது புதிய கோணத்தில் காட்சி அளிக்கிறது. வாய்மையைக் காக்க வேண்டி அவன் வரமீந்தாலுங்கூட, அவ் வரத்தைப் பெற்றுக் கொண்ட கைகேயி இளமனைவி என்றால், பொருள் வேறாகிவிடுகிறதன்றோ? 'வாய்மை காப்பாற்றுவதைப் பற்றித் தசரதன் கவலையுறவில்லை. இளமனைவியைத் திருப்திப் படுத்தவே வரமீந்தான் போலும்' என்று சிலர் மனத்திலாதல் தோன்றக் கூடும். 'பனைமரத்துஅடியில் நின்று பாலைக் குடித்தாலும், உலகம் கள்ளெனக் கொள்ளும்,' என்ற தமிழ் நாட்டு முதுமொழி பெரும்பான்மை தவறுவதில்லை. வான்மீகியார் கூற்றின்படி தசரதனுடைய மூன்றாம் மனைவியாகக் கைகேயியைக் கூறினால், இந்தக் குற்றம் தசரதன்மேல் வருவதை யாரும் தடுக்கவியலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/127&oldid=1496823" இலிருந்து மீள்விக்கப்பட்டது