பக்கம்:அரசியர் மூவர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ☐ அரசியர் மூவர்



மாற்றக் காரணம்

இக்குறைபாட்டை நன்கு அறிந்தான் கம்பநாடன், வாலி முதல் அனைவராலும் தசரதன் 'வாய்மை காத்தவன்' என்று புகழப் படுகின்றான். “வாய்மையும் மரபுங் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன்" (வாலி 4018) என்பது வாலியின் கூற்று. இவ்வாறு தசரதன் புகழப்பட வேண்டுமாயின், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. தசரதன் கைகேயிக்கு வரம் ஈந்தது, தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றவே அன்றி, அவளுடைய இளமை அழகில் மயங்கி அன்று என்பதை வெளிப்படுத்த வேண்டும். கைகேயியின் மாட்டுத் தான் கொண்ட கழிபெருங்காதலைப் பிறர் அறியும் படியே அரசன் காட்டிக்கொண்டு வாழ்கிறான். இந்நிலையில் அவள்தான் இளை யவள் என்று கூறப்படுமானால், அவனுடைய காதல் அவளுடைய புற அழகில் ஈடுபட்டுத் தோன்றியதே என்று கொள்ள நேரிடும். இந்த இடுக்கணைத் தீர்ப்பதற்குக் கம்பன் கையாண்ட வழியே சிறந்தது. இவ்வாறு அவளை மூத்தவளாக்கிச் சுமித்திரையை இளையாளாக்கியதால், மற்றொரு பயனும் கிடைக்கிறது. கைகேயி தான் இளையாள் என்ற காரணத்தால் தன் அழகைத் துணையாகக் கொண்டு தன் கருத்தை நிறைவேற்றிவிட்டாள் என்ற பழிச் சொல்லும் இல்லாமற் போகுமன்றோ? இளையாளாக சுமித்திரை இருக்கவும் தசரதன் கைகேயிமாட்டு அதிக அன்பு செலுத்தினான் எனின், அஃது அவளுடைய சிறந்த பண்பாட்டைக் கருதியே என்றுதான் நினைக்கத் தோன்றும். எனவே, தலையாய கலைஞனாகிய கம்பநாடன் வால்மீகியின் போக்கை மாற்றியமைத்ததால் இரண்டு பெரிய செயல்களைச் செய்துவிடுகிறான். முதலாவது, தசரதன் மீது ஏற்படும் அடாப்பழியைக் குறைத்தது. இரண்டாவது, கைகேயியின் மீது ஏற்படக் கூடிய பழியைக் குறைத்தது. மூலத்திலிருந்த கதைப் போக்கை மாற்றும் இடங்களில் எல்லாம் கம்பன் ஒரு பெரும்பயனை விளைக்க வேண்டியே மாற்றுகிறான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/128&oldid=1496829" இலிருந்து மீள்விக்கப்பட்டது