பக்கம்:அரசியர் மூவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூழ்ந்த தீவினை ☐ 11


வேண்டும் என்றே செய்கிறாள் ஆகலின், அவளை அறிமுகம் செய்து வைக்கும்பொழுதே கொடுமணம் உடையவளாக அறிமுகஞ்செய்து வைக்கிறான். அன்றியும், அவளால் தீமை செய்யப்படும் இராமனோ, அவளுக்கு ஒரு தீங்குஞ் செய்தவன் அல்லன். அப்படி இருக்கவும், அவனுக்குத் தீமை செய்யத் துணிந்த அவள் மன நிலையை என்னென்று கூறுவது கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, காரணம் இன்றியும் பிறருக்குத் தீமை செய்ய முற்படும் இழிகுணம் உடையவர்களுள் தலையாயவள் கூனி. எனவே, அவளுடன் பிறந்த இந்த இழிதகைமையை நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று கருதிய கம்பநாடன்,

'கொடுமனக் கூனி' (1445)

'மூன்றுலகினுக்கும் ஓர் இறுதி மூட்டுவாள்' (1446)

'காலக்கோளனாள்'(1449)

'வெவ்விடம் அனையவள்' (1452)

‘சூழ்ந்த தீவினை' (1454)

'வேதனைக் கூனி'(1460)

‘தீய மந்தரை'    (1483)

என்ற தொடர்களால் கூனிக்கு ஓர் 'அருச்சனை' செய்துவிடுகிறான். இவ்வாறு தொடர்ந்து அவளை ஏசியது போதாதென்று கருதிப் போலும் 'உள்ளமும் கோடிய கொடியாள்' (1487) என்று இறுதியாகச் சொல்லித் தீர்த்துவிட்டான். உள்ளமும் என்ற உம்மையால், உடலும் வளைந்த கூனி என்பதைப் பெற வைத்தான்.

பல வகை முயற்சி

இக்கொடுமனக் கூனி கைகேயியின் மனத்தைத் திரிக்கப்பல வழிகளைக் கையாண்டாள்; முதன்முதலாகக் கைகேயியின் 'தாய்மைக்கு முறையிடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/13&oldid=1495422" இலிருந்து மீள்விக்கப்பட்டது