பக்கம்:அரசியர் மூவர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ☐ அரசியர் மூவர்



வில்லை. மன்னன் மறுமுறை தந்ததைத் தடை கூறாமல் ஏற்றுக் கொண்டாள் என்றுமட்டும் அறிய முடிகிறது. மேலும், தான் இளையாளாய் இருந்தும் மன்னன் தன்பால் ஒன்றும் தனிப்பட்ட முறையில் பரிவு காட்டவில்லையே என்று அவள் வருந்தவில்லை என்பது அறிய முடிகிறது. அன்றியும், ஆண்டில் மூத்தாளாய கோசலை முதலில் பெற்றதற்காக அவள் மாட்டுப் பொறாமை கொள்ளவில்லை என்றும் அறிகிறோம்.

இரண்டாம் சந்திப்பு

இனி அடுத்து நாம் சுமித்திரையைக் காண்பது அவள் கரு வுயிர்த்த காலத்திலாகும். அங்கு அவள் ஒன்றும் பேசக்கூடிய நிலையில் இல்லை. நாமும் அவள் பேசுவாள் என்று எதிர் பார்க்கவும் இல்லை. ஏனைய அரசியர் இருவரும் மைந்தரைப் பெற்றது போலவே அவளும் முதலில் ஒரு மைந்தனைப் பெற்றாள்.

“இளையவன் பயந்தனன் இளைய மென்கொடி” (284)

என்று கவிஞன் அதனைக் குறிக்கிறான். சுமித்திரை சிறிது நேரம் தாழ்த்து மீட்டும் ஒரு புதல்வனைப் பெற்றாள். முதலில் பிறந்த இலக்குவனுடைய பிறப்பைக் கூறவந்த கவிஞன் இந்திரன் மகிழும்படி பிறந்தான் என்றான்; ஆனால், சந்துருக்கனன் பிறப்பைக் கூறும் பொழுது இவ்வுலத்தார் மகிழ அவன் பிறந்தான் என்கிறான்.

“படங்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார்
நடங்கிளர் தரமறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடங்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.” (285)

(ஆதிசேடனாலே தாங்கப்பெற்ற இப்பூமி மகிழ்ச்சி அடையவும், வேதங்கள் மகிழ்ச்சி நடனம்புரியவும் சிம்மராசியிலே மக நாண் மீனில் தவறாகப் பார்க்கின்றவர்களுக்கு விஷம் கக்கும் கூரிய விழியையுடைய சுமித்திரைமீட்டும் ஒரு மகனை ஈன்றாள்.)

ஏனையோர் போல ஒரு மகனை அல்லாமல் இரு மைந்தரைப் பெற்றதால் சுமித்திரை அதிகம் மகிழ்ந்தாளா, அன்றி வருந்தினாளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/130&oldid=1496835" இலிருந்து மீள்விக்கப்பட்டது