பக்கம்:அரசியர் மூவர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 ☐ அரசியர் மூவர்



தாயும் மைந்தரும்

இலக்குவனைக் கண்டு அத்தாய் ஒரு சொல் கூடச் சொல்ல வில்லை. அவள் மைந்தன் என்ன செய்யக்கூடும் இத்தகைய சந்தருப்பத்தில் என்பதை நன்கு அறிந்தாள் எனில், அதற்குக் காரணம் யாதாய் இருத்தல் கூடும்? தன்னைத்தான் நன்கு அறிந்திருந்த சுமித்திரை, தன் வயிற்றில் பிறந்த மைந்தன் எவ்வாறு நினைப்பான் என்பதையும் அறிந்துள்ளதில் வியப்பொன்றும் இல்லை. 'தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பிள்ளையை வீட்டிற் சென்று பார்க்க வேண்டா,' என்பது தமிழ் நாட்டு முதுமொழி. இராமன் மாட்டும், அவன் தாயாகிய கோசலை-மாட்டும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தாள் சுமித்திரை. இவள் காட்டிய அன்பைக் கோசலையும் பிரதிபலிக்கிறாள்.

இராமனுடைய முடி சூட்டலைத் தோழிகள் மூலமே முதலிற் கேள்விப்படுகிறாள் கோசலை ; எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால், இராமனை வளர்த்தவளாகிய கைகேயியிடம் தன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று ஏனோ அவள் நினைக்கவில்லை? அதற்கு மறுதலையாகச் சுமித்திரையிடம் செல்கிறாள் அம்மாதரசி. இராமன் பொருட்டுக் குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கருதிய அவள், சுமித்திரையை உடன் அழைத்துக்கொண்டு செல்கிறாள். கோசலையின் இச்செயலைக் குறிக்க வந்த கவிஞன், ஒர் அடைமொழி தருகிறான் சுமித்திரைக்கு.

"துன்னு காதல் சுமித்திரை யோடும்போய்
மின்னு நேமியான் மேவிடம் மேவினாள். (1404)

கோசலை தன் ஆசைக்குப் (காதல்) பாத்திரமான (துன்னு) சுமித்திரையோடும் திருமால் கோயிலுக்குச் சென்றாளாம் பூசனை புரிய, வயதால் முதிர்ந்த கோசலையின் ஆசைக்குப் பாத்திரமானவள் வயதால் இளைய சுமித்திரையா? முறைப்படி இருக்கவேண்டுமாயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/134&oldid=1496850" இலிருந்து மீள்விக்கப்பட்டது