பக்கம்:அரசியர் மூவர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ☐ அரசியர் மூவர்


 இருவருள் ஒருவரை இழந்துதான் மற்றவரைக் காக்க முடியும் என்பதை அவளுடைய கூர்த்த மதி உடன் கண்டுகொண்டது.

எனவே, அவள் அடுத்துச் செய்யப்படவேண்டுவதைப் பற்றி ஒரு வினாடி நினைந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். இதுவரை இராமன் பேசும்பொழுது மிகவும் கவனத்துடன் தன்மை ஒருமையையே பயன் படுத்துகிறான். உடன் நிற்கும் இலக்குவனை அவன் உளப்படுத்தவே இல்லை.

'கான்இறை கண்டு இங்ஙன் மீள்வன்.'

'எனையார் நலிகிற்கும் ஈட்டார்?’ (1745,1746)

இவ்வாறு இராமன் கூறினாலும், சுமித்திரை இலக்குவன் விஷயத்தில் முன்னரே ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள்.

இலக்குவன் குறிப்பு

இந்நிலையில் கைகேயியிடமிருந்து வந்த பணிப் பெண்கள் மரவுரியைத் தாங்கி வந்தார்கள். அவர்கள் மரவுரியை இராமனுக்காகவே கொணர்ந்தாலும் தான் முன்னே நின்றமையின், இலக்குவனே அதைப் பெற்றுக்கொண்டான். பெற்றுக்கொண்ட பிறகே இலக்குவனுக்கு ஒர் ஐயம் தோன்றிற்று. இராமனுடன் வனஞ் செல்ல வேண்டும் என்று விரும்பிய தன்னைத் தாய் மனவமைதியுடன் ஏற்றுக்கொள்வாளா என்பதே அவனது ஐயம். தந்தையிடம் உத்தரவு பெற அவன் விரும்பவில்லை. அவனைப் பொறுத்த வரையில் தசரதன் ஒரு பகைவனே ஆகிவிட்டான். எனவே, அவனைப்பற்றி இலக்குவன் கவலைப்படவில்லை. என்றாலும், சுமித்திரையாது கூறுவாளோ என்ற ஐயம் மட்டிலும் அவனை வருத்துகிறது. இராமனையும் உடன் வைத்துக்கொண்டு தாயிடம் தன் கருத்தைக் கேட்பது நாகரிகம் அற்ற செயலாகும். கேளாவிட்டாலும், மிஞ்சிவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும். யாது செய்யலாம்? என்று நினைந்த இலக்குவன், ஒரு முடிவுக்கு வந்தான்; தாயின் நுண்ணிய அறிவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/138&oldid=1496855" இலிருந்து மீள்விக்கப்பட்டது