பக்கம்:அரசியர் மூவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 ☐ அரசியர் மூவர்


"மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் இறந்திலன் இருந்திலன் என்செய்து ஆற்றுவான் பிறந்திலன் பரதன்நீ பெறுத லால்,' என்றாள்." (1462)

என்ற முறையில் கைகேயின் தாய் மனம் இளகுமோ என்று கூறிப் பார்த்தாள்; அம்முறை பயன்படாது என்று கண்டவுடன் சகக்களத்தி யாகிய கோசலை பெறப்போகும் வாழ்வைப் பெரிதுபடுத்திக் காட்டினாள். அதனைச் சொல்லும்பொழுதே கைகேயியின் அகங்காரத் தீக்கு எண்ணெய் விடுகின்றாள். 'இராமன் முடி சூடிய பிறகு நீ வறுமை யடைவாய். நின்னை வந்து இரந்தவர்க்குக் கொடுக்கவும் நின்பால் ஒன்றும் இராது. அந்நிலையில் நீ கோசலையைச் சென்று பணிந்து, அவள் தருவதைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்,' என்று கூறுகிறாள். இதிலும் கைகேயி மனம் மாறுபடவில்லை. இவ்விரு வகையிலும் கேகயன் மகள் மனம் மாறவில்லை என்பதைக் கண்ட கூனி, இறுதியாக ஒரு 'பிரமாஸ்திர'த்தைப் பயன்படுத்திவிட்டாள்; என்றைக்குமே பெண்களுக்குரிய ஒரு குணத்தைப் பயன்படுத்த முடிவு செய்துவிட்டாள். எந்தப் பெண்ணும் தாய் வீட்டைப் பிறர் குறை கூறப் பொறுத்திருக்கமாட்டாள். அதிலும், சாதாரண இடத்தில் பிறந்து, உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்களுக்கு ஒரு வகையான 'தாழ்மை உணர்ச்சி' Inferiority Complex இருந்து கொண்டேயிருக்கும். அதை யாரேனும் எடுத்துக் காட்டிவிட்டால், புலிபோலச் சீறும் இயல்புடையவர்கள் பெண்கள். பெண்ணாகிய கூனிக்கு இது தெரியாதா? எனவே, இதுவரை திரியாத கைகேயியின் மனத்தைத் திரிக்க இம்முறையைக் கையாண்டுவிட்டாள்.

பிரமாஸ்திரம்

சக்கரவர்த்தியாகிய தசரதனை நோக்கக் கேகயன் சாதாரணமான சிற்றரசன்தான். தசரதன் ஒரு புறம் இருக்க, ஜனகன்கூடக் கேகயனை நோக்கப் பெரிய அரசன்தான். மேலும், ஜனகனுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/14&oldid=1320570" இலிருந்து மீள்விக்கப்பட்டது