பக்கம்:அரசியர் மூவர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 ☐ அரசியர் மூவர்



சேர்க்காமல் தெய்வப் பிறவியாகவே கொள்ளல் தகும். இவ்வாறு கூறுவதிலும் ஓர் அழகு பொருந்தக் கூறுவதையும் காண்டல் வேண்டும். 'மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா,' என்று கூறிய அத்தெய்வம், அதனையடுத்து யாது கூறியிருத்தல் வேண்டும்? 'அவ்வாறன்றி, அவனுக்கு ஏதேனும் தீங்கு நேருமாயின், அவன் முன்னரே நீ முடிந்துவிடு, என்றுதானே கூறல் வேண்டும்? அவ்வாறு கூறினாலும் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால், 'இராமனுக்குத் தீங்கு நேர்ந்தால் என்ற அமங்கலமான சொல்லை வாயாற் கூறக்கூட அம்மானிடத் தெய்வம் அஞ்சு கிறது. 'விராவரும் புவிக்கெலாம் வேதமே என' இராமனுக்குத் 'தீங்கு நேர்ந்தால்' என்று கூற எவ்வாறு நாத்துணியும்? எனவே, அதனைச் சொற்களாற் கூறாமல், குறிப்பால் பெற வைக்கிறாள்.

"'மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா;அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள்.”

'அது அன்றேல்' என்ற சொற்களாலேதான் அவள் அஞ்சிய அச்சத்தை வெளியிட முடிந்தது. ஆனால், தன் மகனைக் கூறும் பொழுது 'முன்னம் முடி,' என்கிறாள். 'இராமனுக்கு முன்னரே நீ இறந்துவிடு,' என்பதே இப்பகுதியின் பொருள். அயல் வீட்டிலிருந்து வந்து வாழ்க்கைப்பட்ட சீதைக்குக்கூட இச்சொற்களைக் கேட்டவுடன் ஒரு துணுக்கம் ஏற்படுகிறது.

சரியான நேரத்தில் சீதைக்கு இச்சொற்கள் நினைவுக்கு வருகின்றன. பிரமாத்திரத்தாலே கட்டுண்டு இறந்தவனை ஒப்பக் கிடக்கும் இலக்குவனைக் காண்கிறாள் பிராட்டி, தன்னால் நேர்ந்த இக்கொடும்பழியை நினைத்து ஆவிசோர்கிறாள் அக்கற்பரசி. காடு நோக்கிப் புறப்படுகையில் தன் மாமி கூறிய இச்சொற்கள் பிராட்டியின் நினைவுக்கு வருகின்றன. உயிர் துடிக்க, உள்ளந் துடிக்க, இதனைக் கூறுகிறாள். 'தீவினையின் பயனாய்க் கடுமையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/144&oldid=1496890" இலிருந்து மீள்விக்கப்பட்டது