பக்கம்:அரசியர் மூவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூழ்ந்த தீவினை ☐ 13


கேகயனுக்கும் பகைமை வேறு உண்டு. என்றாலும், கேகயன்மேல் படையெடுத்தால் அவன் மருமகனாகிய தசரதன் மாமனாருக்கு உதவியாக வருவான் என்று அஞ்சிய ஜனகன், இதுவரை சும்மா இருந்துவிட்டான். இப்பொழுது இராமன் மன்னனாகிவிட்டால், ஜனகனுக்குக் குளிர்விட்டுவிடும். இராமன் அரசனாகி விட்ட பிறகு ஜனகன் கேகயன் மேல் படையெடுத்தால், அவனுக்கு யார் உதவிக்கு வருவார்கள்? ஆகவே, 'உன் தகப்பன் வாழ வேண்டுமானால், இராமன் அரசனாகக் கூடாது' என்று தருக்க முறைப்படி கூனி கூறுகிறாள்.

"காதல் உன்பெருங் கணவனை அஞ்சிஅக் கனிவாய்ச்
சீதை தந்தைஉன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாது லன்அவன்; உந்தைக்கு வாழ்வினி யுண்டோ?
பேதை உன்துணை யாருளர் பழிபடப் பிறந்தார்?


“மற்று நுந்தைக்கும் வான்பகை பெரிதுள மறத்தார்
செற்ற போதுஇவர் சென்றுஉத வாரெனில் செருவில்
கொற்றம் என்பதுஒன்று எவ்வழி உண்டது கூறாய்;
கற்ற முங்கெடச் சுடுதுயர்க் கடல்விழத் துணிந்தாய்”

(1480, 1481)

என்ற முறையில் விரிவாகவும் மனத்திற்பதியும் வகையிலும் கேகயன் படப்போகும் துயரத்தைக் கூனி கூறினாள். தன் தாய் வீட்டுக்கு நேரிடப் போகும் இழிவைக் கற்பனையில் காணத்தொடங்கி விட்டாள் கைகேயி. எந்தப் பெண்ணும் பொறுக்க இயலாத ஒரு காட்சியாகலின், அவள் மனம் உடனே மாறிவிட்டதாம். இதைக் கவிஞன் அழகாக,

“தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது.” (1483)

என்று கூறுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/15&oldid=1495424" இலிருந்து மீள்விக்கப்பட்டது