பக்கம்:அரசியர் மூவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூழ்ந்த தீவினை ☐ 15



யான" கைகேயி இதற்கெல்லாம் பதற்றம் அடைவாளா? எனவே, கூனியின் இந்தக் கூப்பாட்டைச் சிறிதும் மதியாதவளாய்,

“தெவ்வடு சிலைக்கைஎன் சிறுவர் செவ்வியர் ;
அவ்வவர் துறைதொறும் அறம்தி றம்பலர் :
எவ்விடர் எனக்குவந்து அடுப்பது ஈங்கு?” (1452)

என்று கேட்கிறாள். இருவரும் நின்று பேசும் இச்சொற்களால் கவிஞன் தீமையின் பதற்றத்தையும் நன்மையின் பொறுமையையும் நமக்கு எடுத்துக் காட்டிவிடுகிறான். கைகேயியின் எதிரே கூனியை வைத்துக் காணும்பொழுது அவள் கொடுமை பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. அடுத்து, 'இராமன் முடி சூடப் போகிறான்,' என்கிறாள் கூனி. இச்சொல்லைக் காதாற் கேட்டதும் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த கைகேயி சிறந்த ஒரு நவமணிமாலையைக் கூனிக்குப் பரிசாக நல்கினாள். மகிழ்ச்சியில் திளைத்து மாலையைத் தருகின்ற கைகேயியின் எதிரே கூனி என்ன செய்கிறாள் பாருங்கள்.

“தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீயுக
விழித்தனள் வைதனள் வெய்து உயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தைஅக்கொடிய கூனியே." (1459)

பிறர் அடைகின்ற இன்பத்தைப்பொறாமல் அவர்கட்குத் தீங்கு செய்ய நினைக்கும் கயவர் அனைவரும் கூனியின் இனத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பிறர் மகிழும் பொழுது அடையும் மனவருத்தத்தைத் தான் இப்பாடல் கூறுகிறது.

இராமனுக்குப் பட்டங்கிடைத்தாலும் பரதனுக்குப் பட்டங் கிடைத்தாலும் கூனியைப் பொறுத்தவரை ஒன்றுதான். தனிப்பட்ட முறையில் அவளுக்கு ஒன்றும்பயன் ஏற்படாது என்று அறிந்திருந்தும் ஏன் இவ்வாறு சூழ்ச்சி செய்கிறாள்? கூனி செய்யும் இத்துணைப் பெரிய சூழ்ச்சிக்கு ஏதாவது ஒரு காரணம் இருத்தல் வேண்டும். ஒன்று, பரதன்மேல் கொண்ட அன்பினால் அவள் இதனைச் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/17&oldid=1495430" இலிருந்து மீள்விக்கப்பட்டது