பக்கம்:அரசியர் மூவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ☐ அரசியர் மூவர்



திருத்தல் கூடும். ஆழ்ந்து நோக்கினால் இக்காரணம் நிலை பெறுமாறு இல்லை. பரதன்மேல் கொண்ட அன்பால் தூண்டப்பட்டு இதனைச் செய்தாள் எனில், இறுதிவரை பரதனுக்குப்பட்டம் கிடைக்க அவள் முயன்றிருத்தல் வேண்டும். தன் வேலை முடிந்ததும் அவள் யாதொரு முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை. மேலும், பரதன்மேல் கொண்ட அன்பால் இது செய்தாள் எனில், இராமனை ஏன் காட்டிற்கு அனுப்பச் சூழ்ச்சி செய்ய வேண்டும்? பரதனுக்குப் பட்டத்தைப் பெறுவதுடன் அவள் நிறுத்தி இருக்கலாமன்றோ? இராமன் காடுசெல்வதற்கும், பரதன் பட்டம் அடைவதற்கும் தொடர்பு யாது? ஒன்றுமில்லை. எனவே, அவள் இராமனைக் காட்டுக் கனுப்பவே இப்பெருஞ் சூழ்ச்சியைச் செய்தாள் என்று நினைய வேண்டி உளது. அச்சூழ்ச்சியை நிறைவேற்றவே கைகேயியையும் பரதனையும் பயன்படுத்திக்கொண்டாள் என்றும் நினைய வேண்டியுளது.

எவ்விதமான காரணமும் இல்லாமல் இராமன் மேலும் கோசலை மேலும் கூனிக்குத் தீராப் பகை மூண்டுவிட்டது. கைகேயியின் தோழி என்பதற்காக ஒரு வேளை கோசலையாவது கூனியை இழித்துப் பேசியிருக்கலாம். ஆனால், இராமன் மறந்தும், கூனிக்குத் தவறு இழைக்காதவன். இருந்தும், இவ்விருவருக்கும் தீங்கிழைக்கவே கூனி இவ்வடாத செயலைச் செய்தாள் ஆகலின், அவள் கொடுமனம் உடையவளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/18&oldid=1495661" இலிருந்து மீள்விக்கப்பட்டது