பக்கம்:அரசியர் மூவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 19


பிறர்க்குத் தீங்கு புரிபவரல்லர். எப்பொழுதும் நல்லெண்ணம் இவர் களைச் சூழ்ந்திருக்கும். பிறர்க்குத் தீதுசெய்தறியாத இவர்கள், சூழ்நிலை காரணமாகச் சில சமயங்களில் தீங்கிழைப்பார்கள். இவ்வாறு இழைக்கும் தீமையும் இவர்களே செய்ததாய் இராது; பிறர் தூண்டுதலின்மேல் தவறான செயலைச்செய்வார்கள். இவர்களிடம் குற்றங் காணவேண்டுமாயின், தவறுடையார் நட்பைப் பெரிதாக மதித்துப் போற்றுகின்றவரே என்றுதான் கூற வேண்டும். கேகயன் புதல்வியும் தசரதன் மனையாட்டியுமாகிய கைகேயி இந்த இனத் தாருக்கு ஒர் எடுத்துக்காட்டாவாள்.

இயற்கையிலேயே பல நற்பண்புகளும் உடைய பெருமாட்டி அவள். 'தெய்வக் கற்பினாள்', 'ஆழ்ந்த பேரன்பினாள்', 'கேகயர்க்கிறை திருமகள்', 'தேவி', என்பன அவளுக்குக் கவிஞன் தரும் சில பட்டங்கள். இவை அனைத்தும் அவளது நற்பண்பை நமக்கு அறிவிக்கக் கவிஞன் கையாண்ட சொற்கள். ஏன்? தான் ஆக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் நன்கு அறிய வேண்டும் என்பதும், அப்பாத்திரத்தின் குணநலன்களையும் நன்கு அறிய வேண்டும் என்பதும் அவனுடைய குறிக்கோளாகும். இம்மட்டோடல்லாமலும், சில சந்தர்ப்பங்களில் சில பாத்திரங்களைப் பற்றி நாம் தவறான முடிவைச் செய்துவிடநேரிடுகிறது. அம்மாதிரி முடிவைச் செய்யாமல் இருப்பதற்கும் கவிஞன் அதிக முயற்சி செய்ய வேண்டி உளது. கைகேயியைப் பற்றிச் சில சமயங்களில் இவ்விடர்ப்பாடு தோன்றக் கூடும். அவள் செய்த செய்கையால் ஒரு பெரிய அரசு கேடுற்றது; அரசன் உயிரை இழந்தான் ; அவளும் கணவனை இழந்தாள். ஆனாலும், இறுதியில் அவள் நினைத்த நினைவு கைகூடவில்லை. எனவே, வீண் துயரத்திற்கும் பழிக்கும் ஆளான அவளை நாம் கொடியளாக முடிவு செய்துவிடக்கூடாது.

உறங்கும் அழகி

இவ்வளவையும் மனத்தில் வைத்துக்கொண்டுதான் கவிஞன் அவளை நமக்கு அறிமுகம்செய்து வைக்கிறான். கொடுமனக் கூனி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/21&oldid=1356934" இலிருந்து மீள்விக்கப்பட்டது