பக்கம்:அரசியர் மூவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ☐ அரசியர் மூவர்


பெரிய சூழ்ச்சி ஒன்றை மனத்தில் வைத்துக்கொண்டு, கைகேயியைத் தேடி வருகிறாள். அவள் வரவையும் அதன் கொடுமையையும் கவிஞன் பெரியவாக்கிக் காட்டுவதெல்லாம் கைகேயியை அறிமுகம் செய்வதற்கேயாம். கூனியின் தடபுடல் வருகைக்கு ஏற்ற நிலையில் கைகேயி இல்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கூனி உள்ளே நுழையும்பொழுது. அந்த உறக்கத்தில் அவளை நமக்கு அறிமுகம் செய்யும் கவிஞன், ஒரு பெரிய பயனைப் பெற்றுவிடுகிறான். எவ்வளவு அழகில் சிறந்தவர்கள் என்று நம்மால் கருதப் பெறுகிறவர் களும் உறங்கும் பொழுது அழகுடன் விளங்க மாட்டார்கள். இதைப் பற்றிச் சந்தேகம் கொள்ளுகிறவர்கள் அனுபவத்தில் பார்த்தே தெரிந்துகொள்ளலாம். இதற்கொரு காரணம் உண்டு. நாம் விழித் திருக்கும் பொழுது மனத்தில் தோன்றும் தவறான எண்ணங்களை எல்லாம் அடக்கிவிடுகிறோம். எனவே, இந்த எண்ணங்களால் தோன்றும் முகக் குறிப்பும் மறைக்கப்பட்டுவிடுகிறது. எவ்வளவு உயர்ந்த மனப்பண்புடையவர்கட்கும் ஒரளவு தீய பண்புகளும் இருந்தே தீரும். எனினும், அறிவுடையவன் மனத்தில் தோன்றும் இத்தீய பண்புகள் வெளிப்பட வாய்ப்பு அளிப்பதில்லை. ஆனால், உறங்கும் பொழுது இவ்விதத் தடையாதும் இல்லை. எனவே, மனத்தில் விளையாடும் இவ்வெண்ணங்கள் முகக்குறிப்பிலும் வெளியாகின்றன. இதனாலேயே ஒருவர் தூங்கும் பொழுது அவரது முகத்தில் பல விதமான கோணல்கள் தோன்றக் காண்கிறோம். ஆனால், இளங்குழந்தைகள் உறங்கும் பொழுது அவர்கள் விழித்திருந்த பொழுது தவழ்ந்த அழகு குறையாமல் இலங்கக் காண்கிறோம்.

இந்நிலைக்கு மாறாக யாரேனும் ஒருவர் உறங்கும் பொழுதும் மிக்க அழகுடன் விளங்கினார் என்றால், அதனால் வெளிப்படும் ஓர் உண்மையுண்டு. அதாவது, அம்முகத்தையுடையவர் யாவராயினும், அவர் மிகச் சிறந்த எண்ணமும் பண்பும் உடையவர் என்பதே யாகும். இவ்வுண்மை மனவியலார் (Psychologists) அறிந்த ஒன்று. இது கருதியே போலும் பொதுமறை தந்த பெரியார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/22&oldid=1356950" இலிருந்து மீள்விக்கப்பட்டது