பக்கம்:அரசியர் மூவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ☐ அரசியர் மூவர்.


 கள் என்பவர்களிடம் மட்டும் அவள் அன்புடையவளாய் வாழ்ந் திருப்பின், அதனைக் கவிஞன் 'அளி' என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்க மாட்டான். தொடர்பில்லாதார் மாட்டுஞ் செல்லும் மன நிலையைத்தானே 'அளி' என்று பெரியோர் குறிக்கின்றனர்? எனவே, பெருங்குடிப் பிறந்து பெருவாழ்விற் புகுந்தவளாகிய இம்மாதரசி, பெருங்குடிமகளாகவே உள்ளாள் என்பதை நினைவூட்டவே போலும் 'அளி'பொழிந்தது என்று கவிஞன் கூறுவானாயினன் “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம்”(575) என்றும் "கண்ணிற்கு என்னாம் கண்ணோட்டமில்லாத கண்?”(573) என்றும் பொதுமறை கூறியதற்கேற்ப, இவ்வரசமாதேவியின் கண்கள் அருளைப் பொழிந்தன என்றே கூறுகிறான்.

இவ்வடியால் கேகயன் மடந்தையின் மனத்தையும், முகவழகை யும் நமக்குக் காட்டிய கவிஞன், அடுத்த பாடலில் அவளுடைய கால் அழகையும் காட்டுகிறான். வேதனை விளைவிக்கும் கூனி சென்று, உறங்குகிற கைகேயியின் கால்களைத் தொட்டு எழுப்பினளாம். இந்நிலையில் கவிஞன் அக்கால்களுக்கு உவமை கூறுகிறான்.

காற்கமலம்

“எய்திஅக் கேகயன் மடந்தை ஏடுஅவிழ் நொய்துஅலர் தாமரை நோற்ற நோன்பினால் செய்தபே ருவமைசால் செம்பொன் சீறடி கைகளின் தீண்டினாள் காலக் கோள்அனாள்.” (1449)

மென்மையாக மலருந்தன்மையுடைய தாமரை பல நாள் தவஞ் செய்ததாம். ஏன் தெரியுமா? பூக்களிற் சிறந்தது தாமரை என்றுமட்டும் இருந்தது போதாதாம். அனைவர் முகங்களுக்கும் தன்னை உவமையாகக் கூறியதும் போதாதாம். ஆனால், அழகிற் சிறந்தவளான கைகேயியின் முகத்திற்குத் தான் உவமையாகாவிடினும், அவளுடைய கால்களுக்காவது (பாதம்) உவமையாகிவிட வேண்டுமே என்றுதான் தவஞ்செய்ததாம். இதனைத்தான் கவிஞன் 'நோற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/24&oldid=1495635" இலிருந்து மீள்விக்கப்பட்டது