பக்கம்:அரசியர் மூவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 23


 நோன்பினால் உவமை சால் சீறடி என்று குறித்தான். அவள் கால்கள் இத்தகையன எனின், முகம் எத்தகையதாய் இருந்திருக்கும் என்பதை நம் கற்பனைக்கு விட்டுவிட்டான் கவிஞன்.

இங்ஙணம் கூனி அவள் கால்களைத் தொட்டவுடனே கைகேயி எழுந்துவிட்டாளாம். இதிலும் ஒர் அழகைக் காண்கிறான் கவிஞன். ஒருவர் காலைத் தொட்ட மாத்திரத்தில் விழித்துவிடுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. மேலும், உறக்கம் நீங்குகையில் ஏதோ ஒன்றை உணர்ந்துகொண்டு எழுந்தாள் என்றல்லவா கவிஞன் குறிக்கிறான்?

"தீண்டலும் உணர்ந்தஅத் தெய்வக் கற்பினாள்” (1450) என்ற அடியால் விழிக்கும் அம்மாதரசியின் மன நிலையை நமக்கு விளக்குகிறான். விழிப்பு வரும்பொழுது ஏதாவது ஒர் உணர்ச்சி வரும் என்று கூறுவதற்கில்லை. ஒரு வேளை உறக்கம் கெட்டு விட்டதே என்ற வருத்தங்கூடச் சில சமயங்களில் தோன்றலாம். அவ்வாறாயின், இங்குக் கைகேயி பெற்ற உணர்ச்சி யாது? பேரரசியான அவள் உறங்கும் பொழுது யார்தாம் அவளை எழுப்ப அதிகாரம் பெற்றவர்? அவள் அருமைக் கணவன் அவ்வாறு செய்யலாம். ஆனால் அவன் அவளுடைய கால்களைத் தொட்டு எழுப்ப வேண்டிய கட்டுப்பாடு இல்லையே! ஒரு வேளை மிக மிக இன்றியமையாத காரணத்திற்காக வேறு யாரேனும் எழுப்பினார்களோ? அவ்வாறு தான் நினைத்துக்கொண்டு அவள் எழுந்தாள். 'பிறர் ஒருவருடைய கைகள் தன்னுடம்பில் பட்ட மாத்திரத்தில் கற்புடைய மாதரசி ஒருத்திக்கு ஒரு வகைப் பயிர்ப்பு ஏற்படும். வேறு தன்னை ஒத்த பெண்கள் தொட்டாற்கூட இவ்வாறு உண்டாகுமா? எனில்,'ஆம்'என்றே கூறல் வேண்டும். ஏன் எனில், பெண்களை அல்லாமல் பிறர் தொடுதல் என்பது இல்லாத ஒன்று. எனவே, கால்களை ஒருத்தி தொட்டாள் என்பதைத்தான் கைகேயி உணர்ந்துகொண்டு எழுந்தாள் என்று கூறுகிறான் கவிஞன். அவ்வாறல்லாமல் தசரதனே ஒரு வேளை தொட்டிருக்கலாமே எனின், அவன் அவள் காலைத் தொட வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/25&oldid=1495631" இலிருந்து மீள்விக்கப்பட்டது