பக்கம்:அரசியர் மூவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 25



பெரியதொரு துன்பம் வருகிறதென்று அச்சுறுத்திய கூனிக்குத் தக்க விடையன்றோ இது! "பகைவரை வெல்லும் வில்லேந்திய என் மக்கள் அவரவர்கள் நெறிதவறாமல் இருக்கும்பொழுது எனக்கு எவ்வாறு இடர் வர முடியும்?” என்கிறாள் அத்தாய் இற்றை நாளில் எத்தினை தாய்மார்கட்கு இவ்வளவு துணிச்சலுடன் தம் பிள்ளைகளைப் பற்றிப் பேச வாய்ப்பு இருக்கிறது? எனவே, தக்க பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையர் கவலையின்றி வாழ்ந்து வீடு பேற்றையும் அடைவர் என்ற பழைய அகநானூற்றுப் பாடல் முற்றிலும் உண்மையாதலை அறிகிறோம்.

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோர்.” (அகம்.66)

பிள்ளைகள் என்று பெயரளவில் இருந்துவிட்டால் மட்டும் இத்தகைய பெருமிதத்தைத் தாய் பெறமுடியாதென்பதையும் கைகேயியின் சொற்கள் குறிக்கின்றன. "அவரவர்கள் கடமைகளில் தவறாதவர்கள்,” என்று குறிப்பதால், இக்கருத்து விளங்கும். பொதுவாக எல்லா மைந்தர்களிடத்தும் அத்தாய் கொண்டிருந்த அன்பையும் நம்பிக்கையையுமே முதற்பாடல் குறிக்கிறது. நால்வரிடத்தும் அன்பு செலுத்தும் நற்பண்பைப் பெற்றவளாயினும், கைகேயி இராமன்பால் தனியன்பு பூண்டு ஒழுகினாள் என்பதும் அறிதற்பாலது. கோசலை வயிற்றிற் பிறந்த இராமன் கைகேயியிடம் வளர்ந்ததும், இவள் வயிற்றிற்பிறந்த பரதன் கோசலையிடம் வளர்ந்ததும் அனைவரும் அறிந்தனவே. இராமன் கைகேயியிடம் வளர்ந்தது மட்டுமன்றி, அவளும் அவனைத் தான் பெற்ற மகனாகவே மதித்தாள்; பேசினாள்; அன்பும் செய்தாள். இக்கருத்தை வலியுறுத்தவே ஆசிரியன் இரண்டாம் பாடலில் “இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ?” என்று அவளைக் கேட்க வைக்கிறான். இத்துணைப் பெருமையும் சிறப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/27&oldid=1495636" இலிருந்து மீள்விக்கப்பட்டது