பக்கம்:அரசியர் மூவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ☐ அரசியர் மூவர்


 முடிந்துவிடும். பரம்பரையாக அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கட்கு இந்த அரண்மனைச் சூழ்ச்சி பற்றி நன்கு தெரியும். எனவே, இத்தகைய சூழ்ச்சி ஒன்று இங்கு நடைபெறுகிறதென்பதைக் கைகேயியின் நினைவுக்குக் கொணர விரும்புகிறாள் கூனி. 'ஏனையோராய் இருந்தால், குறிப்புணரும் ஆற்றல் பெற்றிருக்கவியலாது. ஆனால், இங்ஙணம் அரசவாழ்விலேயே பிறந்து அதிலேயே புகுந்துள்ள உனக்குமா இது விளங்கவில்லை? என்று அவள் அகங்காரத்தைக் குத்திக்காட்டுகிறாள். அம்மட்டோடில்லை. 'பேரரசி ஆன நீ' என்று அவள் கூறும் பொழுது கைகேயி தனது ஆற்றலால் ஏனைய மூத்த அரசிகளிடம் தசரதன் அன்பு செல்லவொட்டாமல் தடுத்துத் தன்பால் அவனை இழுத்துக்கொண்டதையும் குறிப்பிடுகிறாள். 'அத்துணைப் பேராற்றல் பெற்ற நீ, இப்பொழுது உன் நிலைமைக்கு இடையூறு வரவும் சும்மா உறங்கலாமா?' என்றுங் கூறுகிறாள்.

இந்தப் புது முறை எதிர்ப்பாலும் மந்தரை ஏதும் பயனைப் பெற்ற தாகத் தெரியவில்லை. இதனைக் கேட்ட கைகேயியின் சீற்றம் மிகுதியானது தவிர, வேறு பயன் ஒன்றும் இல்லை. மேலும், தனக்கெதிராக ஒரு சூழ்ச்சி நடைபெறுகிறதென்று கூனி கூறியதை நம்ப மறுத்துக் கூனியே சூழ்ச்சி செய்வதாகவும் குறிப்பித்தாள்.

“எனக்கு நல்லையும் அல்லை நீ ; என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை ; வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்!”

(1471)

என்ற கேகயன் மடந்தை கூற்று, இன்னும் அவள் மனம் மாறவில்லை என்பதனையே அறிவிக்கிறது. “இன்னும் என் எதிர் நிற்றியேல், உன் அற்பத் தன்மையுடைய நாவைத் துண்டித்துவிடுவேன்!' (1473) என்றும் அவள் அச்சுறுத்தினாள். -

இங்ஙணம் கூனியை அச்சுறுத்திய கைகேயி வாய் தவறி மற் றொரு குறிப்பையும் கூறிவிட்டாள். ஒரு மனிதன் அடைய வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/30&oldid=1495643" இலிருந்து மீள்விக்கப்பட்டது