பக்கம்:அரசியர் மூவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ☐ அரசியர் மூவர்

 இதனால் கைகேயியின் நம்பிக்கை தளர்ந்துவிட்டதென்பதைக் கண்ட கூனி, தன் கட்சி வெற்றி பெறும் என்ற உறுதியுடன் மேலும் கூறத் தொடங்கிவிட்டாள். ஆனால், இளையவனுக்கும் முடி சூட உரிமையுண்டு என்ற அதையே திருப்பிக் கூறுவதால் பயனொன்றும் இல்லை. எனவே, இரண்டு இளையவர்களுள் இராமன் பட்டம் ஏற்பதால் ஏற்படும் கேடுகளைப்பற்றியே பேசுகிறாள். ஒரேயடியாக இராமனைக் குறைகூற இன்னம் கூனிக்கு மனத் திடம் வரவில்லை. தன் தலைவியின் மனம் எவ்வளவு தூரம் மாறிற்று என்பதை அறிய முடியவில்லையாகலின், மெள்ளப் பொது நீதி ஒன்றைக் கூறுகிறாள்.

"அறன்நி ரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்
பெறல்அ ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் ; அறம்நினைந்துமை வலிகிலர் ஆயினும், மனத்தால்
இறல்உ றும்படி இயற்றுவர் இடையறா இன்னல்.” (1476)


“எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறாகும் மாந்தர் பலர்." (514)

என்ற அரிய திருக்குறளின் கருத்தே முதலிரண்டு அடிகளிற் கூறப்படுகின்றது. உமை வலிகிலர்...இயற்றுவர்....' என்று கூனி பன்மையில் குறிப்பிடுவது நோக்கற்குரியது. இப்பாடலிற் கூறப் பெற்றவர் யார்? யார் பெறுதற்கரிய செல்வத்தைப் பெற்ற பின் மனம் மாறுவர்? யார் அறத்தைக் கருதிக் கைகேயிக்குத் துன்பஞ் செய்யா விட்டாலும், சிறுசிறு தொல்லைகளாகத் தந்து உயிரை வதைப்பவர்? இந்த வினாக்களுக்கு விடை பாடலில் இல்லை. இதுவரை இராமனைப் பற்றிக் கூறிக்கொண்டு வந்த கூனி, இப்பொழுது இன்னுஞ் சிலைரையும் குறிக்கிறாள் என்பதைமட்டும் அறிய முடிகிறது. இது வரை ஒருமையில் பேசினவள் இப்பொழுது 'இயற்றுவர்' என்று பன்மையில் குறிப்பது ஒருவருக்கு மேற்பட்டவர்களை என்பது நன்கு விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/32&oldid=1495647" இலிருந்து மீள்விக்கப்பட்டது