பக்கம்:அரசியர் மூவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 31


 புதிய கோணம்

கூனி பன்மையில் குறிப்பிட்டது யார் யாரை என்று கைகேயி எண்ணத் தொடங்கிவிட்டாள். இப்புதிய புதிருக்கு விடை கூறுபவள் போலக் கூனி கோசலையைப் பற்றிக் கூற முற்படுகிறாள். மீட்டும் மீட்டும் இராமன் பெயரைக் கூறிக்கொண்டு அவனால் இடர் விளையும் என்று கூனி கூற விரும்பவில்லை. அதற்கொரு தக்க காரணமும் உண்டு எவ்வளவு தூரம் கைகேயி மனம் மாறினாள் என்பதைச் செவ்வையாக அறிந்துகொள்ளு முன்னர்க் கூனி இதனைச் செய்ய விரும்பவில்லை. பிறந்த நாள்தொட்டு இராமன் சிற்றன்னையால் வளர்க்கப்பெற்றவன். அவள் அவன்பாற் கொண்ட தாயன்பு சாதாரணமான தன்று என்பதற்கு “இராமனைப் பயந்த எனக்கு இடருண்டோ?” என்று அவள் கூறியதே சான்று. தசரதனும் இதனை நன்கு அறிந்தவனாகலின், "வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை” (1450) என்று கூறுகிறான். எனவே, அந்தத் தாயன்பை அதிகம் கிளறிவிட்டு, அதனால் தான் வெற்றி பெறமுடியும் என்று நினைக்கவில்லை கூனி ; அது மிகுதியும் நினைவுறுத்தப்பட்டால் அதனால் என்ன தீங்கு விளையுமோ என்றும் அஞ்சினாள். ஆகலின், இராமனை விட்டுவிட்டுச் சுற்றி உள்ளவர்களால் விளையும் தீங்கு பற்றியே பேசுகிறாள் உள்ளமும் கோடிய அக்கொடியாள்.

கூனியின் பிரமாஸ்திரம்

இதனை அறியாத கேகயன் மடந்தை, மெள்ள மெள்ளக் கூனி வீசிய வலையில் வலுவாக அகப்பட்டுக்கொள்கிறாள். இறுதியாக அவள் தாய் வீட்டுக்கும் தீங்கு நேரிடும் என்று கூறினாள் கூனி. இதுவே அவள் இறுதியாக வைத்திருந்த 'பிரமாஸ்திரம்'. எந்தப் பெண்ணும் தப்ப முடியாத இந்த அம்புக்குப் பால் போன்ற பளிங்கு மனம் படைத்த கைகேயி இரையானதில் வியப்பில்லை. தன் தந்தையாகிய கேகயனுக்குத் தீங்கு நேரும் என்றதைக் கேட்டவுடன் கைகேயி மனம் முற்றிலும் மாறிவிட்டது. இந்த நிலையில் செய்யப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/33&oldid=1495650" இலிருந்து மீள்விக்கப்பட்டது