பக்கம்:அரசியர் மூவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ☐ அரசியர் மூவர்


 வேண்டுவது ஒரு காரியந்தான். தசரதனாகிய கணவன்மேல் அவள் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பையும் நம்பிக்கையையும் தகர்க்க வேண்டுவது ஒன்றுதான் எஞ்சியுளது. அதுவும் நேரடியாகச் செய்யப்படும் செயலன்று.கணவன்மாட்டுக் கழிபெருங் காதல் கொண்ட அக்கற்புக்கரசியின் எதிரே அவள் கணவனைக் குறை கூறுவது இடையூறாகவும் முடியலாமன்றோ? ஆகலின், கூனி மறைமுகமாக அவனைத் தாக்குகிறாள். தசரதன் அன்பு பொய்யானதென்று காட்டிவிட்டால், இது எளிதில் முடிந்துவிடும், ஆனால், அவ்வளவு எளிதில் அவன் அன்பைப்பற்றிக் குறை கூறவும் இயலாது. ஏனைய மனைவியர் அனைவரையும் மறந்துவிட்டு இரவு பகல் எந்நேரத்திலும் கைகேயியின் அரண்மனையிலேயே இருக்கும் அவன் அன்பை எவ்வாறு மறுப்பது? புதியதொரு வழியை மேற்கொள்கிறாள் கூனி.

கணவன் அன்பா?

தசரதனுக்கு மைந்தர் அனைவரிடமும் அன்பு உண்டென்றும் இராமன்மேல் அதிக அன்பு செலுத்துகிறான் என்றும் நம்பியிருக் கிறாள் கைகேயி. ஆனால், தசரதன் பரதனை வெறுக்கிறான் என்று எடுத்துக்காட்டினால், அவள் தாயுள்ளம் திடுக்கிடும். எவ்வளவு தான் அவளும் இராமனிடம் அதிக அன்பு பாராட்டிச் சீராட்டினாலும், பரதனைப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் என்பதை மறந்துவிடக் கூடாது. மேலும், கோசலையிடம் பரதன் வளர்ந்துவருவதால் தசரதனும் கோசலையிடம் காட்டும் அன்பின் அளவு பரதனிடமும் காட்டுவான் என்று கருதினாள். இந்த நிலை மாறித் தசரதன் பரதனை ஒதுக்க முற்படுகிறான் என்று தெரிந்தால், கைகேயி என்ன நினைப்பாளோ? இம்முறையைக் கையாண்டு பார்த்துவிட உறுதி கொண்ட கூனி, குறிப்பாக இதைக் கூறுகிறாள். இந்நிலையில் கம்பனுக்கு ஒர் இடையூறு தோன்றுகிறது. வால்மீகி காட்டியபடி தசரதன் இழைத்த தீமையை முற்றுங் காட்ட விரும்பவில்லை கம்பநாடன். எனவே, அவன் குறிப்பிட விரும்பாத நிகழ்ச்சியைச் சற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/34&oldid=1495652" இலிருந்து மீள்விக்கப்பட்டது