பக்கம்:அரசியர் மூவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 33


 அறிய வேண்டும். நீண்ட நாள் பிள்ளைப் பேறில்லாத தசரதன் கேகயனிடம் கைகேயியைத் தனக்கு மணமுடிக்குமாறு வேண்டி னான். ஆனால், முன்னரே பல மனைவியர் உளராகலின், தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்குப் பட்டம் கிடைக்காதென்று எண்ணிய கேகயன், மகளைத் தர மறுத்துவிட்டான். எவ்வாறாயினும் கைகேயியை மணக்க விரும்பிய தசரதன், பின் விளைவை அறியாமல், கைகேயியின் வயிற்றில் பிறக்கும் மகனுக்குப் பட்டம் தருவதாக வாக்களித்துவிட்டு அவளை மணந்துகொண்டான். இராமன் முதற்பிள்ள்ையாகப் பிறந்ததிலிருந்தே தசரதனுக்கு இவ்வாக்குறுதி மனவருத்தத்தைத் தந்துவந்தது. என்றாலும், பட்டாபிடேகச் சமயத்தில் பரதன் அங்கு இல்லாமற் செய்துவிட்டால் பாதிக் கவலை குறையும் என்று நினைந்து, முடி சூட்டு விழாவுக்குச் சில காலம் முன்னர் ஒரு காரியம் செய்தான். பிறந்ததிலிருந்து பாட்டன் வீடு சென்றறியாத பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விட்டான் தசரதன். தாய்ப் பாட்டனாரைப் பார்க்கப் பரதனை அனுப்பியதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், அவனை அனுப்பியவுடன் முடிசூட்டு விழாப் பற்றிய மந்திர ஆலோசனை செய்து மறு நாளே நாளும் குறித்தது கூனிக்குப் பழைய ஐயத்தைக் கிளப்பி விட்டது. மேலும், அவள் கைகேயியின் நாட்டிலிருந்து அவளுடன் சீதனமாக வந்தவள் ஆதலின், இந்தப் பழைய வரலாற்றை அறிந்திருந்தாள். அவள் அறிந்திருந்து இதனைத் தக்க சமயத்தில் பயன்படுத்த விரும்பினாள். என்றாலும், இதனை வெட்ட வெளிச்சமாகக் கூறினால் கைகேயி நம்புவாளோ என்ற ஐயம் வேறு இருந்தது அவளுக்கு ஏன் எனில், கைகேயி அறியாத ஒரு நிகழ்ச்சியன்று இது. அவள் அறிந்திருந்தும், ஏன் இதுபற்றி ஒன்றும் செய்யவில்லை என்ற ஐயம்வேறு கூனிக்கு உண்டு. ஆதலின், நேரடியாக இதனைக் கூறாமல் மறைமுகமாகவும் குறிப்பாகவும் கூறுகிறாள். பெண்களுக்கே உரிய குறிப்பு மொழியால் அவள் இதனைக் கூறுவது அறிந்து ஆராய்தற்குரியது. "அரசனுடைய ஆணையாலே, தேக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/35&oldid=1495653" இலிருந்து மீள்விக்கப்பட்டது