பக்கம்:அரசியர் மூவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ☐ அரசியர் மூவர்



மரங்கள் நிறைந்ததும், கல் நிறைந்ததும், நீண்ட தூரம் உடையதுமான கேகய நாட்டுக்குப் பரதனைக் கொண்டு சென்றுவிட்டதன் கருத்து எனக்கு இப்பொழுதுதான் வெட்டவெளிச்சமாய்த் தெரிகிறது”என்ற பொருள்பட அவள் கூறுகிறாள்.

“பாக்கியம் புரிந்திலன் பரதன் தன்னைப்பண்டு
ஆக்கிய பொலங்கழல் அரசன் ஆணையால்
தேக்குஉயர் கல்அதர் கடிது சேண்இடைப்
போக்கிய பொருள்எனக்கு இன்று போந்ததால்.” (1465)

அதாவது, "பாட்டனைப் பார்த்துவிட்டு வரட்டும் என்ற நல்ல எண்ணத்தால்தான் தசரதர் அனுப்பினார் என்று அன்று கருதினேன். ஆனால், உண்மை வேறு விதமாகவன்றோ இருக்கின்றது அவனை அப்புறப்படுத்திவிட்டுச் சூழ்ச்சி செய்வதற்கன்றோ தசரதர் அவனை அனுப்பியுள்ளார். இது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இன்று தெரியத் தொடங்கிவிட்டது” என்பதே இதன் பொருள்.

இமயம் சாய்ந்தது

வரிசையாகவும் அடுக்கியும் கூறப்பெற்ற இவ்வாதங்களின் முன்னர்க் கைகேயி நிலைகுலைந்துவிட்டாள். அவளுடையதாய்மை, பிறந்த வீட்டுப் பற்று எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கம், சகக்களத்தியின் செல்வாக்கில் ஏற்பட்ட காழ்ப்பு, கணவன் அன்பில் கொண்ட ஐயம் என்ற இத்தனையுஞ் சேர்ந்து அவள் தூய சிந்தையையும் திரித்து விட்டன.

சாயக் காரணம்

இத்துணைக் காரணங்களும் கூடிய வழியே மணந்திரிந்தாள் எனினும், ஆழ்ந்து நோக்கினால், ஓர் உண்மை விளங்காமற் போகாது. இத்துணைக் காரணங்களிலும் ஒன்றையாவது அவள் தானே நினைந்து பார்க்கவில்லை. எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் எடுத்துக் காட்டியவள் கூனியல்லவா? எடுத்துக்காட்டியதோடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/36&oldid=1495655" இலிருந்து மீள்விக்கப்பட்டது