பக்கம்:அரசியர் மூவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ☐ அரசியர் மூவர்


 ஆனால், இவ்வாறு மூன்று பேரையும் தவறு செய்தவர்களாகக் காட்டக் கம்பநாடன் விரும்பவில்லை. எனவே, கைகேயியின் மனம் மாறுபட்டமைக்கு வேறு காரணங்களும் உண்டு என்று கூறுகிறான். “கேவலம் கூனியின் மொழிகளால் கைகேயி மனம் மாறினாள் என்று கருதிவிடவேண்டா. அவள் மாறுவதற்குப்பின் வரும் காரணங்களும் துணை புரிந்தன. தேவர்கள் சூழ்ச்சி, அவர்கள் பெற்றுள்ள வரங்கள், அந்தணர்கள் இயற்றிய அருந்தவம், அரக்கர் பாவம், அல்லாதவர்கள் இயற்றிய அறம் இவை யாவும் கூடியே இவ்வாறு செய்தன." எனக் கூறுகிறான்.

இங்குக் கூறப்பெற்ற காரணங்களால் கைகேயி மனம் மாறினாள் என்ற வாதத்தை விடுத்து அவள் மாற்றத்திற்கு மற்றோர் காரணத்தை ஆய்ந்து எழுதப்பட்டதே 'நாடக மயில்' என்ற கட்டுரை.

“தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயை யும்அவர் பெற்றுள வரம்உண்மை யாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தாலும்
"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்அறம் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மையன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே"

(1483, 1484)

பரிவுடன் காண்க

இத்துணைப்பேர்களும் கூடி இயற்றிய தவமும் அறமும் வாளா இருந்துவிடுமா? அவை அனைத்தும் பயன் தர வேண்டுமாயின், இராமன் காட்டுக்குப் போக வேண்டுமன்றோ? அவன் காடு செல்ல வேண்டுமாயின், யாராவது ஒருவர் அதற்குரிய பழியையும் சுமந்து தானே ஆகவேண்டும்? எனவே, கைகேயியின் மனம் திரியக் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/38&oldid=1495657" இலிருந்து மீள்விக்கப்பட்டது