பக்கம்:அரசியர் மூவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|||கேகயன் மடந்தை ☐ 37}



மும் கூறி, அதன் அடிப்படையையும் கவிஞன் கூறிவிட்டான். இங்குக் கூறப்பெற்றவை அனைத்தும் இரு பிரிவினுள் அடங்கும். ஒன்று தவமும் அறமும்; ஏனையது அரக்கருடைய பாவம். அறமும் பாவமும் சேர்வதில்லை. ஆனால், இப்பொழுது இவை இரண்டும் சேர்ந்தே ஒரு தொழிலைச் செய்துவிட்டன என்கிறான் கவிஞன். இந்நிலையில் புறப்பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது: குமண வள்ளலைப்பாடிய பெருஞ்சித்திரனார் என்ற புலவர்,தாம் குமணனைத் தேடிவந்தமைக்குக் காரணங் கூறுகிறார்: "என்னுடைய வறுமை பின்னே இருந்து தள்ளியது; ஆனால், அதே சமயத்தில் உன் புகழ் முன்னே இருந்து இழுத்தது. ஆதலின், இவண் வந்தேன்.” என்ற கருத்துப்பட “இன்மை துரப்ப இசைதர வந்து நின்"...(புறம் 161) என்று பாடிச் செல்கிறார். பின்னே இருந்து ஒருவர் தள்ளினால் முன்னே எங்காவது ஒரிடத்தில் போய் விழ நேரிடும். ஆனால், அதே சமயத்தில் முன்னிருக்கும் ஒருவர் இழுத்தால் உறுதியாக ஒரிடம் செல்ல முடியுமன்றோ? அதேபோலத் தேவர் சூழ்ச்சியாலும், அந்தணர் தவத்தாலும், அல்லவர் இயற்றிய அறத்தாலும் தள்ளப்பட்ட இராமன், எங்கோ சென்று பயனற்றுப்போய்விடாமல் இருப்பான் வேண்டி, அரக்கர்கள் பாவம் முன்னே இருந்து இழுத்தது என்றும் கவிஞன் கூறுவது எத்தனை சுவை பயப்பதாய் உளது இவ்வாறு முன்னும் பின்னும் உந்தப் பெற்றதால் இராமன் காடு செல்வதைக் கைகேயியின் சொற்களால் அவன் வனம் புகுந்தான்' என்று கூறுவது எவ்வளவு அறியாமை என்று கூறுவான் போலக் கூறிக் கைகேயியின் குறையை ஒரளவு குறைக்கிறான் கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பநாடன்.

அயோத்தி அடைந்த தவ்வை

இனி இக்கவிஞனே அத்தேவியை இழித்துப் பேசுவதையும் அதற்குரிய காரணங்களையும் காண்போம். 'தேவி' என்றும், தூய சிந்தை உடையாள்' என்றம் எந்தக் கைகேயியைக் கவிஞன் பாராட்டினானோ, அந்தக் கைகேயியையே இப்பொழுது ஏசத் தொடங்குகிறான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/39&oldid=1495658" இலிருந்து மீள்விக்கப்பட்டது