பக்கம்:அரசியர் மூவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 口 அரசியர் மூவர்


 மந்தரை சூழ்ச்சியால் மனந்திரிந்த அம்மங்கை நல்லாள், அரசன் வரவை எதிர்பார்த்துஅந்தப்புரத்தில் இருக்கிறாள். எவ்வாறு எதிர்பார்க்கிறாள் என்று நினைக்கிறீர்கள்? காதல் மனைவி கணவன் வரவைக் கருதிக் காத்திருப்பது போல இருப்பாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. சூழ்ச்சி என்பதை அறியாத வெள்ளை உள்ளம் படைத்த அப்பெண்ணரசி, இப்பொழுது பெரிய சூழ்ச்சிக்கு அடிகோலிவிட்டாள்.

கூனி சென்றுவிட்ட பின்னர்க் கைகேயி அருமையான மலர்ப் படுக்கையினின்றும் இறங்கிவிட்டாள். மேகம் போலத்திரனட் கரிய கூந்தலிற் சுற்றிய பூக்களைப் பிய்த்து ஏறிந்தாள்; மேகலையை அறுத்து வீசினாள் கைகளில் அழகு பெற்று விளங்கிய வளையல்களை உடைத்து எறிந்தாள். இவை அனைத்தையும் விடக் கொடுமையான ஒரு செயலையும் செய்யத் துணிந்துவிட்டாள். கணவனுடன் வாழும் அவள் நெற்றியில் மங்கலக் குறியாக வைக்கப்பட்டிருந்த அழகிய பொட்டையும் துடைத்துவிட்டாள். எந்த நேரத்தில் தன் திலகத்தை அழித்தாளோ, தெரியவில்லை! அடுத்து அதனை வைக்கக்கூடிய வாய்ப்பையே இழந்துவிட்டாள்! சீரிய கலன்கள் அனைத்தையும் சிந்திய அவள், புழுதியே பாயலாகக் கூந்தலைப் பரப்பிக் கொண்டு புரளத் தொடங்கிவிட்டாள். அவள் கிடக்கும் இந்நிலை மையைக் கவிஞன் இதோ நமக்குப் படம் எழுதிக் காட்டுகிறான்.

மான் ஒன்று கீழே விழுந்து கிடந்ததுபோலவும், கலாபம் விரித்து ஆடின மயில் ஒன்று களைத்துத் தோகை விரித்தபடியே படுத்துவிட்டது போலவும் கைகேயி கிடந்தாள்,' என்று கூறத் தொடங்கிவிட்டான். ஆனால், அவள் புறத் தோற்றத்தில் ஈடுபட்டு இங்ங்ணம் உவமைகளை அடுக்கிவிட்ட கவிஞனுக்கு, 'ஏன் இவ்வாறு இவள் வீழ்ந்து புரள்கிறாள்?' என்ற கேள்வி உடனே எழுகிறது. 'இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கொடிய நினைவால் அல்லவா இவ்வாறு படுத்திருக்கிறாள்?' என்று அந்த வினாவிற்கு உடனே விடையும் கிடைத்துவிடுகின்றது. இந்த விடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/40&oldid=1495660" இலிருந்து மீள்விக்கப்பட்டது