பக்கம்:அரசியர் மூவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 43


 ஏற்புடையனவாகப் பட்டிருப்பின், தாராளமாக அவள் தன் மகனுக்கு முடியைப் பெற்றிருக்கலாம். அதோடு இராமனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டது, காரணமில்லாமல் கொடுமை செய்யும் பண்பல்லவா? அதிலும், தான் போற்றி வளர்த்த மகனை இவ்வாறுசெய்யச் சொல்லுவது கலப்பற்ற கொடுமையன்றோ? அதனால் தனக்கு ஏதாவது பயன் விளைவதாக இருந்தாலும், 'தன்னலம்' என்றாவது கூறிவிடலாம். தனக்கும் நன்மை பயவாது பிறருக்கும் தீங்கு புரியும் இச்செயலை ஏனோ கைகேயி செய்யத் துணிந்தாள்! துணிந்ததைக் காட்டிலும் கொடுமை, அவன் பெயரைக் கூடக் கூற விருப்பம் இல்லாதவள் போல, 'சீதை கேள்வன்' என்று அவனைக் குறிப்பிட்டதாகும். “இராமனைப் பெற்ற எனக்கு இடருண்டோ?” என்று கேட்ட அதே கைகேயி, சில நாழிகை நேரத்துள் இப்படி மாறுவாளானால், அவளை என்னவென்று குறிப்பது? இதை நன்கு ஆய்ந்த கவிஞன், இதோ விடை கூறுகிறான்; அவளுக்கு அடைமொழிகளைப் பாட்டின் நான்காம் அடியில் தருகிறான். “தீயவை யாவையினுஞ் சிறந்த தீயாள்” என்று அவன் கூறும்பொழுது இதே கவிஞன் சென்ற படலத்தில் கைகேயியை நமக்கு அறிமுகம் செய்து வைக்கையில், அவளைப் பற்றிக் கூறிய சொற்களை நினைவில் கொண்டு பார்க்க வேண்டும். அவ்வளவு உயர்ந்த முறையில் அவளைக் கூறியவன் ஏன் இவ்வாறு கூறுகிறான்? காரணம் விளக்கப்பட்டிருக்கிறது முன்னிரண்டு பத்திகளிலும்.

மன்னிக்க முடியாது

இந்த இடத்தில் தொடங்கி வரிசையாக அவளுக்கு வசைமாரி பெய்து செல்கிறான் கவிஞன். காரணம் இந்த ஒன்று மட்டும் அன்று. ஆய்ந்து பார்த்தால், இதுவே மன்னிக்க முடியாத பெரும்பிழை. காரணமின்றி அவள் கேட்ட இரண்டாவது வரம் எத்தனை பேருக்குத் துன்பம் விளைவிக்கிறது என்பதை நினைக்கையில், அவளை எவ்வளவு பழித்தாலும் தகும் என்றே தோன்றுகிறது. ஆனால், குற்றம் இம்மட்டோடு நிற்கவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/45&oldid=1496330" இலிருந்து மீள்விக்கப்பட்டது