பக்கம்:அரசியர் மூவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கேகயன் மடந்தை ☐ 45


தன் வாயாற்கூட இதனைக் கூற அஞ்சி 'மற்றையதொன்று' என்று குறிக்கிறான் எனில், இராமன் மாட்டு எத்தகைய அன்பு பாராட்டினான் அவன் என்பதைக் கூறவும் வேண்டுமா? தசரதனைப் பற்றிக் கூறவந்த கவிஞன், “மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்” என்று குறிக்கிறான். இவ்வளவு வேண்டியும் கேகயன் மடந்தை மனம் மாறவில்லை எனில், அது, இரண்டாவது குற்றம் அன்றோ? இனி மூன்றாவது ஒரு குற்றமும் இழைக்க முற்பட்டு விட்டாள் அவள்.

எந்தக் குலப் பெண்ணுக்கும் கணவன் தெய்வமாவான் என்பது பண்டையோர் கொண்ட கொள்கை. அவனைத் தெய்வம் என்று வழிபடாவிடினும், அவளுக்குச் சிறந்தவர்கள் பட்டியலில் அவனே முதலிடம் பெறுபவன் என்பதில் ஐயமின்று. மறுமணம் செய்துகொள்ளும் பழக்கம் இல்லாத நாட்டில் அவளுடைய நல்வாழ்வின் ஆணிவேராய் அவன் இருக்கிறான் என்பதிலும் ஐயமின்று. எனவே, எந்தப் பெண்ணும் கணவனுக்குத் தீங்கு நேர விட்டுக்கொண்டிருக்கமாட்டாள். அவ்வாறு இருக்க, தானே தன் கணவன் உயிரை வாங்க ஒருத்தி முற்படுவாளா? மாட்டாள் என்பது அனைவரும் உறுதியாக ஒப்பக்கூடியதொன்று. ஏனைய பெண்களைப் பொறுத்த வரை இதுவே முறையாய் இருப்பினும், கைகேயியைப் பொறுத்த வரை இது மாறுபடுதலைக் காண்கிறோம். தான் கேட்ட இரண்டு வரங்களையும் உறுதியாகப் பெற்றுவிடுவதாயின், அதனால் தசரதன் உயிருக்குத் தீங்கு நேரும் என்று அறிந்திருந்தும், அவள் பிடிவாதம் செய்தது வெறுக்கத்தக்க செயலேயாகும். அவன் உயிருக்கு இறுதி நேரும் என்பதை அவள் அறியவில்லை என்றும் சொல்வதற்கில்லை. ஏன் எனில், அவனே பன்முறை அதைக் குறிப்பிடுகிறான்.

. . . . . . . . . . . . . . . . . .."நளினம்போல்
கையான் இன்றுஎன் கண்எதிர் நின்றுங் கழிவானேல்
உய்யேன் நங்காய்! உன்அப யம்என் உயிர்,' என்றான்."

(1527)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/47&oldid=1496471" இலிருந்து மீள்விக்கப்பட்டது