பக்கம்:அரசியர் மூவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சவில்லை. ஆனால், தூய்மையே வடிவான பரதன் முன் அவள் இப்பொழுது நடுங்குகிறாள். வாய் பேசாது நிற்பதைத் தவிர அவள் செய்யத்தக்க செயல் ஒன்றும் இல்லை. பரதன் தன் பிழைக்காகத்தன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவான் என்று எதிர்பார்த்தே அவள் நிற்கிறாள். அவளைக் கொல்லத் துணிந்துவிட்ட அவன்கூட, “தாய் என்ற பாசத்தால் நான் உன்னைக் கொல்லாமல் விடவில்லை. ஆனால், நெடியவன் முனியும்" என்று அஞ்சி நின்றனன், (2171) என்றே கூறுகிறான். ஒரு வேளை பரதனே அவளைக் கொன்றிருந் தாலும், அவள் துன்பத்திற்கு ஒர் அமைதிகிட்டி இருக்கும். ஆனால், இன்னும் இருந்து பெரிய தண்டனையை அடைவாள் வேண்டிப் போலும் அவனும் அவளை விட்டுவிட்டான். எனவே, இதுவரை கைகேயியை மூன்று நிலைகளிற் கண்டோம் தூய்மையே வடிவான கைகேயி, தீயினும் கொடிய கைகேயி, தன் செயலிழந்து நிற்கும் கைகேயி என மூன்று நிலைகளில் ஒருத்தியைக்காட்டிக் கவிஞன் மனிதன் தன் செயல்களால் எவ்வாறு உயர்வையும் தாழ்வையும் தானே தேடிக்கொள்ள முடியும் என்பதை அழகுற எடுத்துக் காட்டுகிறான்.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/53&oldid=1496084" இலிருந்து மீள்விக்கப்பட்டது