பக்கம்:அரசியர் மூவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ☐ அரசியர் மூவர்


 அனைத்தையும் (கைகேயி) தானே ஏற்றுக்கொண்டு, தசரதனைக் காப்பாற்ற வேண்டும். இந்த இரண்டின் இடைப்பட்டு, 'இருதலைக் கொள்ளி எறும்பாக' இருந்த கைகேயி ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு ஒரு முடிவுக்கு வருகின்றாள் என்று நினைக்க வேண்டியுள்ளது.

மந்தரை சொல்லிவிட்டுப் போன பிறகு தசரதன் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் கைகேயினுடைய மனத்திரையில் இந்த எண்ண ஓட்டங்கள் நன்கு பதிந்திருக்க வேண்டும். எவ்வாறாவது தன் கணவனைக் காப்பாற்றவேண்டும். 'வாய்மையும் மரபும் காத்தவனாக' அவனை ஆக்க வேண்டும். 'பொய்உரையாத புண்ணியனாக' அவனை ஆக்க வேண்டும் என்று கைகேயி முடிவுக்கு வந்து விட்டாள். கற்புடைய மனைவியின் கடமை அது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. 'தற்காத்துத் தற்கொண்டானை'ப் பேண வேண்டிய கடப்பாடு, அவளுடையதாக ஆகிறது. ஆகவே, தான் எந்த நிலையை அடைந்தாலும், தனக்கு எத்தகைய அவப்பெயர் வந்தாலும், தான் எந்தப் பாவத்திற்குப் போவதாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல், தன்னைக் கைப்பிடித்தவனாகிய கணவனுடைய குற்றங்களை நீக்கி, அவனுக்குப் பழி வராமல் செய்து அவன் நரகத்தை அடையாமல் செய்ய வேண்டியது தன்னுடைய கடமை என்று கைகேயி முடிவு செய்திருத்தல் வேண்டும்.

இந்த முடிவை அவள் மேற்கொண்ட பிறகு, அந்த முடிவைக் கொண்டுசெலுத்துகின்ற முறையில் அவள் ஒப்பற்ற ஸ்திதப்ரக்ஞ நிலையில் நின்று செயலாற்றுகின்றாள். இவ்வாறு செய்வதனால் கணவன் உயிர் போய்விடும் என்று முதலில்அவள் நினையாமல் இருந்திருக்கலாம். ஆனால், கணவன் அதை எடுத்துக் காட்டிய பிறகு, 'கணவனுடைய உயிரா? அல்லது அவன் பழிக்கு ஆளாகாமல் இருப்பதா? என்ற ஒரு வினா கைகேயியின் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/66&oldid=1496524" இலிருந்து மீள்விக்கப்பட்டது