பக்கம்:அரசியர் மூவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் ☐ 73


என்று சொல்லுகின்றான் தசரதன். இந்த வார்த்தைகள் ஆழ்ந்து நோக்கற்குரியன. மைந்தனை அழைத்து,

“நின்னை வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது" (1373)

எனவும்,

“ஓர் நெறிபுக உதவிட வேண்டும் (1374)

எனவும் கெஞ்சி, 'நான் வானப்பிரஸ்தம் செல்ல வேண்டும், நீ பட்டத்தை ஏற்றுக்கொள்'

“யான் நின்வயின் பெறுவது ஈது”

என்றும் கேட்க வேண்டிய தேவை என்ன வந்தது? ஆகவேதான் இதில் ஆழமான பொருள் ஏதோ புதைந்திருக்க வேண்டும்.

“இராகவன் கன்யா சுல்க அடிப்படையை அறிந்திருந்தான். எனவே, ராஜ்ஜியத்தை மறுத்துவிடுவான்.” என அஞ்சிய தசரதன், அவன் மறுப்பதற்கு வாய்திறக்கும் முன்னரே இதை வரமாகக் கேட்கின்றான்.

“யான் நின்வயின் பெறுவது ஈது”

என்று சொல்வானேயானால் மைந்தன் வாய் திறப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலையில் இராகவனுடைய மனநிலை என்ன என்பதைச் சொல்ல வருகின்ற கம்பன் மிக அற்புதமான ஒரு பாடலைப்பாடுகின்றான். அனைவரும் அறிந்ததுதான் அந்தப் பாடல் என்றாலும் அதிலுள்ள ஒருசில சொற்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியனவாகும்.

'தாதை அப்பரிசு உரைசெய தாமரைக் கண்ணன்' (1382)

தந்தையாகிய தசரதன் பதினான்கு பாடல்களில் விரிவாகப் பேசி, 'நீ இந்த வரத்தைத் தருவாயா' என்றவுடன் தாமரைக் கண்ணன் - இராகவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/75&oldid=1496726" இலிருந்து மீள்விக்கப்பட்டது