பக்கம்:அரசியர் மூவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ☐ அரசியர் மூவர்


 காரண காரியத் தொடர்பு கற்பித்தல் என்பது ஏறத்தாழ இயலாத காரியம். அச்சுழல்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு கவிஞன் தன்னுடைய பாத்திரங்களைப் படைக்கிறான். அவனுடைய வெற்றியை அளவிடச் சுலபமான ஒரு வழி உண்டு. எவ்வளவு தூரம் நம் அனுபவத்திற்கு இப்பாத்திரம் பொருத்தமாக இருக்கிறது என்று காணும் பொழுது இவ்வுண்மை வெளிப்படும்; யாரோ நாம் அறிந்த ஒருவரிடம் இப்பண்பாடு இருப்பதுபோல ஒரு நினைவு உண்டாகிறது; ஆழ்ந்து பார்த்தால், நம்மிடங்கூடச் சில சமயங்களில் இக்குறைபாட்டைக் காண்டல் கூடும். நம்மிடமே காணப்படும் காரணத்தால், இவ்வளவு வெறுக்கத் தகுந்தது என்றோ நாம் நினைத்ததில்லை. ஆனால், இதே பண்பைப் பிறரிடம் காணும் பொழுதுதான் இதன் முழுத்தன்மையையும் நாம் அறியமுடிகிறது. இத்தகைய பண்பாடுகள் சிலவற்றை ஒன்றுசேர்த்துத்தான் கவிஞன் தன் பாத்திரங்களைப் படைக்கிறான். உதாரணமாக ஒன்றைக் காண்போம்.

காரணமின்றித் தீமை புரிவோர்

காரணமில்லாமல் பிறருக்குத் தீமை செய்பவர்களை நீங்கள் வாழ்க்கையில் கண்டதுண்டா? இல்லையானால், நீங்கள் அதிருஷ்ட சாலிகள். ஆனால், உலகில் சிலர் இவ்வாறு இருக்கின்றனர். கூடுமான வரையிற் பிறருக்குத் தீமை செய்வதே இவர்கள் தொழில். தீமை செய்யப்படுபவர் இவருக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவராகக்கூட இருக்கலாம். அதுபற்றித் தீமை செய்பவருக்குக் கவலை இல்லை. முடிந்த அளவு தீமையைப் பிறருக்குச் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் சீலர்கள் இவர்கள். தாம் நேரே பிறருக்குத் தீமை செய்ய இயலவில்லையாயினும், கவலை இல்லை; பிறர் படும் வருத்தம் கண்டேனும் அதற்கு மகிழ்வர்; “வேணும் சார்! எனக்கு அப்பவே இவர் இவ்வாறு துன்பப்படுவார் என்பது தெரியும்” என்று கூறித் தம் மகிழ்ச்சியை வெளியிடுவர். பிறர் துன்பங்கண்டு இன்பமடையும் இப் 'பெரியோர்' உலகில் மிகச் சிலர் உண்டு. மிகச் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/8&oldid=1495435" இலிருந்து மீள்விக்கப்பட்டது