பக்கம்:அரசியர் மூவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ☐ அரசியர் மூவர்


 இவ்வாறு அமைப்பதில் உள்ள சிக்கலையும் சிந்திப்பது நன்று. ஆண் மகனாய்ப்பிறந்து வளர்ந்த ஒரு கவிஞன், தான் ஆடவன் என்பதை மறக்க இயலாதன்றோ? எந்தச் சூழ்நிலையில் இருப்பினும், ஓர் ஆண் மகனுடைய பல்வேறு மன நிலைகளையும் அவன் கற்பனை செய்துகொள்ள முடியும். உயர்ந்த அரசன் முதல் தாழ்ந்த ஏவலாளன் வரை அனைவரும் ஆண் என்ற பொதுத்தன்மை உடையவரேயாவர். எனவே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அரசன் எவ்வாறு நடந்து கொள்வான், ஏவலாளன் எவ்வாறு நடந்துகொள்வான் என்று அறுதியிட்டுக் கூறல் இயலும் இயலும் என்று கூறினதால், 'யாவர்க்கும் இஃது இயலுமோ!' என்று ஐயுற வேண்டா. பெருங்கவிகட்கு மட்டுமே இஃது இயலும் அதிலும் அரசனும் ஏவலாளனும் உரையாடும் ஒரு சூழ்நிலையில் ஒரு வினாடி அரசனாகவும் அடுத்த வினாடி ஏவலாளனாகவும் இருந்து கதையை நடத்திச் செல்ல நேரிடும். மேலும், இத்தகைய சந்தர்ப்பங்களில் உவமைகளுடன் பேசவேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதும் உண்டு. அரசன் பேசும் உவமையும் ஏவலாளன் பேசும் உவமையும் ஒன்றாயிருப்பது தவறு. வாழ்க்கையில் அவனவன் தகுதி முதலியவற்றிற்கேற்பவே உவமை கூறப்படல் வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களில் இடம், பாத்திரம் என்பவைகட்கேற்ப உரையாடல் முதலியன அமைப்பதே கவிஞனின் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பாத்திரப் பண்பு

இம்முறையில் பாத்திரப் பண்பை விளக்குவது கடினமே ஆயினும், அஃது இயலாததன்று. காரணம், அரசனும் ஏவலாளனும் வாழ்க்கைத்தரத்தில் எத்துணை வேறுபாடு உடையவராயினும், அடிப்படையில் ஆண் மக்களே. ஆனால் எப்பொழுதும் ஆண்களைப் பற்றி மட்டுமா காப்பியம் பேசுகிறது? பெண்பால் இல்லாத காப்பியமே உலகில் இல்லை என்று கூடக் கூறிவிடலாமே! அவ்வாறாயின், இப் பெண் மனத்தைக் கவிஞன் எவ்வாறு கூறுகிறான்? “பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/82&oldid=1496757" இலிருந்து மீள்விக்கப்பட்டது