பக்கம்:அரசியர் மூவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ☐ அரசியர் மூவர்


இடையூறு நேராத வரை பிறர் மாட்டு அன்பு செய்பவர் உண்டு. அப்பிறர் மாற்றாள் மைந்தரேயாயினும் தன் நலத்துக்கு இடையூறு நேராதவரை அன்பு காட்டுபவர் உண்டு. ஆனால், மாற்றாள் மகனிடம் கொண்ட அன்புக்கு உண்மையான சோதனை வரும் காலமும் உண்டு. கோசலைக்கு நேர்ந்த சர்ந்தர்ப்பமும் இத்தகையதுதான். அவள் அருமை மைந்தன், உலகம் முழுவதும் விரும்பி ஏற்றுக் கொண்டு கொண்டாடும் இராமன், “விராவரும் புவிக்கெலாம் வேதமேயன” இராமன், நாளைப்பொழுது விடிந்ததும் அரசனாகப் போகிறான் என்று அறிந்தாள் அப்பெற்ற தாய்.

தசரதன் முடிபு

மந்திர சபையில் அமைச்சா முதலாயினவரோடு சேர்ந்து தசரதன் செய்த முடிபு மறுநாள் இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பது. அம்முடிபைத் தசரதனே இன்னும் வெளியார் யாருக்கும் கூறவில்லை. அத்தகைய மறைச்செய்தி பணிப்பெண்கள் மூலம் கோசலைக்கு எட்டிவிடுகிறது. இச்செய்தியை அறிவித்தவர்கட்கு “நல்நிதிக்குவை நனி நல்கி” விட்டு, உடனே "தன் துன்னு காதற் சுமித்திரையோடும் போய் மின்னும் நேமியான் மேவிடம் மேவினாள்." (1404) இராமன் கைகேயியின் காதற்புதல்வனாய் அவளிடமே வளர்கின்றான். இந்தச் சந்தர்ப்பத்தில் கைகேயிக்கு இச்செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்று கோசலை ஏனோ நினைக்கவில்லை! அதற்கு மறுதலையாகச் சுமித்திரையை அழைத்துக்கொண்டு திருமால் கோயில் புகவேண்டிய இன்றியமையாமை யாதோ, அறிகிலோம்! 'முடி சூட்டு விழாவில் கைகேயி தலையிடக்கூடும் என்று கோசலையும் தசரதனும் நினைத்திருந்தனரோ' என்று ஐயுறவேண்டி உளது. பின்னர் நிகழும் நிகழ்ச்சிகள் கொண்டு காணுமிடத்து, அவ்வாறு ஐயுறுதற்கு ஏதுவாகவே கோசலையின் செயல் அமைகிறது. அது எதுவாய் இருப்பினும், கோசலையின் செயல் சற்று வியப்பாகவே இருக்கிறது. ஒருவேளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/86&oldid=1496764" இலிருந்து மீள்விக்கப்பட்டது