பக்கம்:அரசியர் மூவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 口 அரசியர் மூவர்



கோசலை. அவளுக்கு இரவில் நடந்த செய்தி ஒன்றும் தெரிய நியாயமில்லை. பொழுது விடிவதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டு உறக்கம் துறந்து நிற்கிறது அத்தாய் உள்ளம்.

இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை. அவள் மனம் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறது. எத்தனையோ எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அலை மோதி எழுகின்றன. இதுவரை அவள் பட்டத்து அரசி, எவ்வளவுதான் தசரதன் கைகேயி மாட்டு மயங்கி நிற்பினும் கோசலையின் முதல் இடத்தை ஒன்றுஞ் செய்யவில்லை அல்லவா? ஆனால், நாளைப் பொழுது விடிந்தால் அவள் முதல் தேவி அல்லள் அல்லவா? அருமை மைந்தனே முடிசூடுவதாயினும், அவள் கணவன் அரசியல் திருவை இழக்கிறான் என்ற எண்ண்மும் ஒரோ வழித் தலை காட்டாமல் இல்லை. எனவே, மைந்தன் முடி சூடுவதால் பெறும் இன்பமும், கணவன் திருவை இழப்பதால் பெறுந்துன்பமும் மாறிமாறித் தோன்ற, ஒரு நிலைப்படாத மன நிலையுடன் பொழுதைக் கழிக்கிறாள். பெண் ஒருத்திக்கே உரிய இம்மனநிலையைக் கவிஞன் 'தாயுள்ளம்' பற்றிய தன் கற்பனையின் உதவி கொண்டு இதோ பேசுகிறான்.

“சிறக்கும் செல்வம் மகற்குஎனச் சிந்தையில்
பிறக்கும் பேர்உவ கைக்கடல் பெட்புஅற
வறக்கும் மாவட வைக்கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.” (1403)

மறுநாட்பொழுதும் விடிந்துவிட்டது. இராம காதையின் மிக முக்கியமான பகுதி நடைபெற்று விட்டது. கரிய மேனியினை உடைய இராமனின் வாழ்க்கையில் ஒப்பற்ற ஒரு மாறுதல் கரிய நிறமுடைய இருட்டில் நடந்துவிட்டது. உலகீன்ற நான்முகனைப் பெற்று எடுத்த இராமனின் வாழ்வில் ஏற்பட்ட பெருமாறுதலை அவ் இராமனைப் பெற்றதாயே அறிந்திலள். எனவே,பொழுது விடிந்ததும் விடியாததுமான நிலையில் அவள் வீட்டு முற்றத்திற்கும் உள்ளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/88&oldid=1496768" இலிருந்து மீள்விக்கப்பட்டது