பக்கம்:அரசியர் மூவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 ☐ அரசியர் மூவர்



பாளோ? என்பதை நாம் அறியோம். ஆனால், அப்பெயருடன் சேர்த்து வழங்கப்படும் தலை அலங்காரத்துடன் இன்று குழந்தைகள் காட்சி நல்குகின்றன. இது கருதியே போலும் 'நல்கூர்ந்தார் செல்வமகள்' (கலித்தொகை 50) என்று சங்கப் புலவன் யார் மகளையோ பார்த்துப் பாடினான்! குழந்தைச் செல்வம் இல்லாமல் ஏனைய செல்வம் படைத்தவர்கட்கு வயது முதிர்ந்த காலத்தில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், கேட்க வேண்டுவதில்லை! தசரதன் வீட்டில் அனைத்துச் செல்வங்களும் நிரம்பியிருந்தும், நீண்ட நாட்களாகக் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. தசரதன் இறுதிக் காலத்தில் நால்வர் மைந்தர் தோன்றினர். இவருள் இராமனும் பரதனும் பெற்ற தாயரிடம் வளராமல், மாறி வளர்ந்தனர். வயதால் இளைய கைகேயி இராமனை வளர்க்கும் கடப் பாட்டில் நின்றாள்; வித விதமாக இராமனுக்குக் கோலம் புனைந்து மகிழ்ந்திருப்பாள். அவ்வாறு கோலம் புனைந்து தான் அதனை அனுபவிப்பதுடன் அமையாமல், தன் மாற்றாளும் இராமனைப் பெற்ற தாயும் ஆன கோசலை கோயிலுக்கும் அவனை அனுப்பியிருப்பாள். மாற்றாள் செய்தனுப்பிய கோலமாயினும், அக் கோலம் புனைந்துள்ளவன் தான் பெற்ற மகனாகலானும், அவனைவரும் விரும்பும் பண்பாட்டினன் ஆகலானும், கோசலை அதனை மிகவும் பாராட்டியிருப்பாள் அல்லளோ! பன்னாட்கள் அவன் புனைந்து வெளிப்பட்ட கோலங்களில் அரசக் கோலமும் ஒன்றாய் இருந்திருக்கலாம். நாளை அரசனாக வேண்டியவன் ஆதலின், இராமனுக்கு அரச வேடம் முற்றிலும் பொருத்தம் உடையதாகவே இருந்திருக்கும். இவ்வாறு இளம்பிள்ளையாய் இருந்த பொழுது அரச வேடம் புனைந்து காட்சியளிக்கையிலும் அரசனுக்கு அறிகுறியாகக் கருதப்படும் இரண்டு பொருள்கள் இருத்தற்கில்லை. அவை இரண்டும் அரசனுக்கு இன்றியமையாத அறிகுறிகள் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/90&oldid=1496770" இலிருந்து மீள்விக்கப்பட்டது