பக்கம்:அரசியர் மூவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 89


ஆட்சிச் சின்னம்

கொற்றக்குடையும் மெளலியாகிய கிரீடமும் இல்லாத அரசனை எங்கேனும் கண்டதுண்டா? அதிலும் பழந்தமிழ் நாட்டில் இவை இல்லாத அரசன் பெயரளவிற்கூட இருந்திருக்க மாட்டான். ஆதலின், அரசனுக்குரிய இவ்விரண்டு அடையாளங்களும் அவன் வெளியில் வரும் பொழுது பயன்படுவன அல்லவா? அரசனுடைய ஆட்சிச் சின்னத்தின் அறிகுறியாகவும், அவன் குடிகள் மாட்டுக் காட்டும் தண்ணருளின் அடையாளமாகவும் உள்ள 'கொற்ற வெண்குடையைக்' குழந்தைக்கு அரச வேடம் புனையும் பொழுது யாரும் தரமாட்டார். எனவே, மகன் வரவைக் கற்பனை செய்துகொண்டிருக்கும் கோசலை, அவன் முடி சூட்டலின் பிறகு வரும் பொழுது கொற்ற வெண்குடையுடன் வருவான் என நினைக்கிறாளாம். தலைமையின் அடையாளமாக, அவன் வரும் பொழுது, இருபுறமும் கவரி வீசி வருவார்கள் ; கொற்ற வெண்குடையுடன் வருவான். அத்தாய் மனம் இதற்கு முன்னர்க் காணாத இக்காட்சியை உறுதியாகக் கற்பனை செய்து கொண்டுதான் இருக்கும். எந்தத் தாய்க்கும் இது இயல்புதான். இராமனுடைய பல்வேறு தோற்றங்களையும் கண்டு மகிழ்ந்த தாய்க்கு இதுவரை காணாத இக்காட்சியில் மனஞ்செல்லுதல் முற்றிலும் பொருத்தமே. இவ்வாறு அவள் எதிர்பார்த்தாள் என்று நேரடியாகக் கவிஞன் இதனைக் குறிப்பிடவில்லை. அதைவிடச் சிறந்த முறையில் இவற்றுள் ஒவ்வொன்றையும் கூறிவிட்டு, இவற்றுள் ஒன்றும் இல்லாமல் வந்தான் என்று கூறுகிறான்.

இல்லாப் பொருள்களைக் குறிப்பிட வேண்டிய இன்றியமையாமை யாது? ஆனாலும், கவிஞன் கூறுகிறான். “குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி” என இங்ஙனம் வாராப் பொருள்களைக் கூறி அவை இல்லாமல் என்று குறிப்பிட்டதற்கு ஒரு கருத்து இருத்தல் வேண்டும். அக்கருத்து யாது என்பதை நாம் ஊகித்து அறிய அடுத்த அடி பயன்படுகிறது. வாராதவைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/91&oldid=1496771" இலிருந்து மீள்விக்கப்பட்டது