பக்கம்:அரசியர் மூவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 91


 தனக்கும் அயோத்தியில் இடம் இல்லையே என்பதறிந்த அறக் கடவுள், மிக்க வாட்டத்துடன் இராமனைப் பின் தொடர்ந்து வருகின்றானாம். 'இனி எமக்கு யாது கதி?' என்று கவலைப்படுபவர்கள் தலையில் கை வைத்துக்கொண்டு செல்வது போலத் 'தருமம் பின் இரங்கி ஏகு'கிறதாம். இவ்விருவரும் கோசலை கண்ணிலும் ஏனையோர் கண்ணிலும் படாமல் வருகின்றனர். நல்ல வேளையாக இவ்விருவரும் அப்பெற்றவள் கண்ணில் படவில்லை. தான் எதிர் பார்த்த இரண்டிற்கு மாறாக இவ்விருவரையும் கண்டிருந்தால் அத் தாயுள்ளம் என்ன பாடுதான் பட்டிருக்கும். இதோ அவள் மனத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன்.

“குழைக்கின்ற கவரி இன்றி
    கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்ல
    தருமம்பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அணையான் மெளலி
    கவித்தனன் வரும்என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்
   முன்ஒரு தமியன் சென்றான்.” (1606)

அத்தாயின் மனத்தில் ஊற்றெடுக்கும் ஏக்கம் முழுவதையும் மூன்றாம் அடியின் இறுதி மூன்று சீர்களும் கொட்டிவிடுகின்றன. “கவித்தனன் வரும் என்று என்று” நினைக்கிறாளாம், அத்தாய்! அந்நினைவு எவ்வளவு ஆழமானது என்பதை நான்காம் அடியின் முதற்சீர் தெரிவிக்கிறது. 'வரும் வரும்' என்ற நினைவால் தழைக்கின்ற உள்ளமாம் அது. அத்தழைப்புக்குக் காரணத்தை ஆராயும் பொழுது தான் இறுதி அடியில் உள்ள 'ஒரு தமியன்' என்ற தொடரின் பொருட்சிறப்பு நன்கு விளங்கும். தழைக்கின்ற பொருளுக்குத் தண்ணீர்மூல காரணமாக இருப்பதுபோல, இத்தாயின் மனம் தழைப்பதற்கு அம்மைந்தனின் மெளலி (கிரீடம்) மூல காரணமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/93&oldid=1496774" இலிருந்து மீள்விக்கப்பட்டது